Published : 10 Jul 2020 05:55 PM
Last Updated : 10 Jul 2020 05:55 PM
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி, திருப்பூரில் முகக்கவச வடிவில் பரோட்டோ தயாரித்து விற்பனை நடைபெற்று வருகிறது.
திருப்பூர் தென்னம்பாளையம் - பல்லடம் சாலையை சேர்ந்த உணவக உரிமையாளர் பாலசுப்பிரமணியம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். பரோட்டா மாவை பிசையும் போது, அதனை இருபுறமும் முகக்கவச கயிறு போன்று பரோட்டா 'மாஸ்டர்' வடிவமைக்கிறார். தொடர்ந்து அதனை தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி எடுக்கிறார்கள். பின்னர் இந்த பரோட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமான பரோட்டாவை விட இது வித்தியாசமாக இருப்பதால், பலரும் இதனை விரும்பி வாங்கி சாப்பிட்டு செல்கிறார்கள்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
"தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும், திருப்பூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் முகக்கவச வடிவில் பரோட்டா தயார் செய்துள்ளோம். இந்த பரோட்டாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் எங்களது உணவகத்துக்கு வருகிறவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
வழக்கமான மாவில் தோசை தயாரிக்காமல், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், கொத்தமல்லி, நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி தயாரித்துள்ள மசாலாவை அதன் மீது வைத்து தோசை தயார் செய்யப்படுகிறது. தோசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பலரும் விரும்பி வாங்கி உண்டு மகிழ்கிறார்கள்.
'மாஸ்க்' பரோட்டா ரூ.30-க்கும், தோசை ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகளைக் கவரும் வகையில், சிறியதாகவும் முகக்கவச வடிவிலான பரோட்டா தயாரித்து விற்கப்படுகிறது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT