Published : 10 Jul 2020 05:27 PM
Last Updated : 10 Jul 2020 05:27 PM

கரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு; தானம் செய்ய முன் வாருங்கள்:  அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் பிளாஸ்மா தானம் அளிக்க முன் வரும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி ரூ.2 கோடி மதிப்பீட்டில் நிறுவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

“தமிழக அரசு, கரோனா தொற்றை குணப்படுத்துவதற்கோ, தடுப்பதற்கோ மருந்துகள் ஏதும் இல்லாத ((No Drug of Choic) சூழலில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் இரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து அதனை கரோனா நோயாளிகளுக்கு செலுத்தி சோதனை அடிப்படையில் நோயை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து பிளாஸ்மா தொடர்பான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) ஆகியவற்றிடம் தமிழ்நாடு அரசு அனுமதி பெற்றது. உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 20 நபர்களுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டு இதுவரை 18 நபர்கள் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* கோவிட் தொற்று நோயிலிருந்து குணமடைந்த நோயாளிகளிடமிருந்து இரத்த கூறுகளை தனியாக பிரித்தெடுக்கும் கருவியின் மூலம் (Apheresis Method) 500மி.லி பிளாஸ்மா பெறப்பட்டு நோயின் தன்மை மிதமாக உள்ள கோவிட் நோயாளிகளுக்கு பிளாஸ்மா வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

*· பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18-65 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை முடிந்து குணமடைந்த பின்னர் எடுக்கப்படும் பரிசோதனையில் எதிர்மறையான பரிசோதனை முடிவு பெறப்பட்ட நாளிலிருந்து 14-வது நாள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடையவர்கள்.

* உயர் இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், இருதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க இயலாது.

* பிளாஸ்மா தானம் செய்ய முன்வருபவர்களுக்கு உரிய பரிசோதனை மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அளவிடப்பட்டு தகுதியான கொடையாளர்களிடமிருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா எடுக்கப்படுகிறது. இதற்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்தவர் 28 நாட்கள் இடைவெளி விட்டு 2-வது முறை தானம் அளிக்கலாம்.

* ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பிளாஸ்மா தானம் வழங்க இயலும். தானமாக பெறப்பட்ட பிளாஸ்மா -40 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் ஓராண்டு வரை பாதுகாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.

* கோவிட்-19 நோய் தொற்று கண்டவர்களுக்கு Steroid மற்றும் இதர மருந்துகள் பலனளிக்காத போதும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் பொழுது, பிளாஸ்மா தெரபி அளிப்பதன் மூலம் நோயிலிருந்து குணமடைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

* தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தலா 200 மி.லி வீதம் பிளாஸ்மா செலுத்தப்பட வேண்டும் இவ்வாறு செலுத்தப்படும் பிளாஸ்மா நோயாளிகளின் உடலில் இருக்கும் கரோனா வைரசின் செயல்பாட்டை நடுநிலை ஆக்கி வைரஸ் எண்ணிக்கையும் குறைத்து கோவிட் நோயாளிகள் செயற்கை ஆக்சிஜன் தேவையை குறைக்க உதவுகிறது.

* ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியினை ரூ.2 கோடி மதிப்பீட்டில் நிறுவ துரித நடவடிக்கையினை அரசு மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அமையவிருக்கும் பிளாஸ்மா வங்கியானது, டெல்லிக்கு அடுத்தப்படியாக இந்தியாவிலேயே 2-வது பிளாஸ்மா வங்கியாக அமையும்.

இதே போல ஐசிஎம்ஆர் ஒப்புதலுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டு குணமடைந்துள்ளார். மேலும், திருநெல்வேலியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆராய்ச்சி வெகு விரைவில் மேற்கொள்ளப்படும்.

* மத்திய அரசின் மருந்து கட்டுப்பாடு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, Aphaeresis கருவியின் உரிமம் பெற்ற இரத்த வங்கிகள் பிளாஸ்மா தானம் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் விரைவில் பிளாஸ்மா தானம் பெறப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

* கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிளாஸ்மா சிகிச்சை வழங்க தகுதியானவர்கள் எவ்வித தயக்கமும் பயமும் இல்லாமல் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்யும் பொழுது உலகளாவிய இந்த கோவிட் தொற்று உள்ள நிலையில் இது ஓர் உயிர்காக்கும் சேவை”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x