தேவையான உணவுப் பொருட்கள் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலம் வழங்கப்பட்டது.
தேவையான உணவுப் பொருட்கள் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலம் வழங்கப்பட்டது.

கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய்: மகள்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி அமைச்சர் சரோஜா உதவி

Published on

கரோனா வைரஸ் சிகிச்சைக்காக தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் உணவின்றி தவித்த இரு மகள்களின் சூழல் குறித்து தகவல் அறிந்த சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா, அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அதிகாரிகள் மூலம் வழங்க உதவினார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே குப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது கணவரை இழந்த பெண் ஒருவர், தனது 17, 19 வயதுடைய இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அங்கு பணிபுரிந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் குப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணும் உள்ளார். தாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றதால் மகள்கள் இருவரும் உணவுக்கு வழியின்றி பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

அமைச்சர் சரோஜா
அமைச்சர் சரோஜா

இது சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அவரது உத்திரவின்பேரில் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் பிரியா மற்றும் காவல் துறையினர் மூலம் இன்று (ஜூலை 10) அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ததுடன்,தேவையான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in