Published : 10 Jul 2020 04:04 PM
Last Updated : 10 Jul 2020 04:04 PM
இந்திய-சீன எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு ஏற்பட்ட தோல்வியை மறைக்கவே இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி அறக்கட்டளைகள் குறித்து பேசி மக்களை திசை திருப்புகிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் 214-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் மக்கான் பகுதியில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (ஜூலை 10) மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் கூறும்போது, "இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி பெயரால் இயங்கும் மூன்று அறக்கட்டளைகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சுயேட்சையான இந்த அறக்கட்டளைகள் இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அமைக்கப்பட்டது. மத்திய அரசின் தணிக்கைக்குழு ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமும் தகவல்களை கேட்டுப் பெறலாம்.
பாஜகவுக்கு எதிராக ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் காரணத்தால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தனிப்பட்ட முறையில் சோனியா காந்தி, ராகுல்காந்தியை தாக்குவதற்காக பாஜக இப்படி செயல்படுகிறது.
'பி.எம். கேர்ஸ்' என்று வசூல் செய்யும் ஒரு அறக்கட்டளையை பிரதமர் உருவாக்கி இருக்கிறார். இதற்கு யார் நன்கொடை கொடுத்தார்கள் என்பதை யாரும் தெரிந்துகொள்ள முடியாது. அது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராது. மத்திய அரசின் தணிக்கைக்குழு தணிக்கை செய்ய முடியாது. 'பிஎம் கேர்'ஸின் நோக்கம் என்ன? அதன் வெளிப்படை தன்மை என்ன என்பதை கூற வேண்டும்.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் மதச்சார்பின்னை பகுதி நீக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. உலகத்திலேயே மதச்சார்பின்மை என்ற வார்த்தைக்கு மிகச்சரியான பொருளை கொடுத்தவர் காந்தி. அதை பாஜக குழி தோண்டி புதைத்துள்ளது.
தமிழக அரசு செயல்பட்டிருந்தால் கரோனா ஏறக்குறைய முடிந்து போயிருக்கும். ஆனால், தமிழக அரசு கரோனா தடுப்பில் சிறப்பாக மட்டுமல்ல சுமாராகக்கூட செயல்படவில்லை.
இந்தியா - சீனா விவகாரத்தில் மத்திய அரசு முழுமையான தோல்வியை சந்தித்து இருக்கிறது. சீனாவுக்கு எதிரான போரின்போது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாடாளுமன்றத்திற்கு வந்து யுத்தத்தில் என்ன நடந்தது என்று நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார். இந்திராகாந்தியும் பாகிஸ்தானுடன் போரிட்டு ஒரு புதிய நிலப்பரப்பை உருவாக்கி அதற்கு ஒரு நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது காங்கிரஸ் கட்சி. அப்போதும் இந்திராகாந்தி நாட்டு மக்களுக்கு உண்மைகளை சொன்னார். இப்போது நாங்கள் கேட்டால் எங்களுக்கு நாட்டுப்பற்று இல்லை, ராணுவத்தினர் மீது மரியாதை இல்லை என கூறுகிறார்கள்.
இந்த ராணுவத்தை உருவாக்கியவர்கள் நாங்கள். பிரதமர் மோடி, இந்திய படைகள் சீன எல்லையில் இல்லை, சீனப்படைகள் இந்திய எல்லையில் இல்லை என கூறுகிறார். இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள். அவர்கள் இந்திய மண்ணில் உயிர் தியாகம் செய்தார்களா? சீன மண்ணில் உயிர் தியாகம் செய்தார்களா? என கூற வேண்டும். இதை ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய சீன எல்லை பிரச்சினையில் மோடி அரசு மகத்தான தோல்வியை அடைந்திருக்கிறது. அதை மூடி மறைக்கவே இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தியின் அறக்கட்டளைகள் குறித்து எல்லாம் பேசி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறாரர்கள். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT