Published : 10 Jul 2020 09:30 AM
Last Updated : 10 Jul 2020 09:30 AM

மின்சார சட்டத் திருத்தம்: இலவச மின்சாரத்திற்கு பங்கம் வராமல் மறுபரிசீலனை செய்க; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

தமிழக மக்களின் அடிப்படை தேவையான மின்சார நுகர்வுக்கு பங்கம் வராமல் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 10) வெளியிட்ட அறிக்கை:

"இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பன்முகப்படுத்தப்பட்ட மின்சார உற்பத்தி பிரிவுகள் அதிகம். அனல்மின் நிலையம், அணுமின் நிலையம், புனல்மின் நிலையம், சூரியமின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி நிலையம் என்று பலவகையில் மின் சக்தி உற்பத்தி செய்யப்பட்டு இன்று தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது.

தமிழகம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாநிலம். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயத்தையே நம்பி உள்ளது. பல்வேறு இயற்கை சீற்றத்தினாலும் மழை பொய்த்து போவதாலும் காவிரியில் தண்ணீர் வரத்து குறைவாக கிடைப்பதாலும் பெரும்பாலும் பம்புசெட் மூலம் பெறும் தண்ணீரால் தான் விவசாயம் நடைபெறுகிறது. அதனால் விவசாயம் செழித்தோங்க விவசாயத்திற்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதனால் விவசாயம் காக்கப்பட்டு தங்குதடையின்றி விவசாயம் நடைபெற பேருதவியாக இருக்கிறது.

அதோடு ஏழை எளிய மக்களின் குடிசைகளுக்கும் மற்றும் பசுமை வீடுகளுக்கும் இலவச மின்சாரமும் மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து வீட்டு மின்சார நுகர்வோருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதற்கான மானியத்தை மாநில மின்சார ஆணையத்தின் அனுமதியுடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு தமிழக அரசு நேரடியாக வழங்குகிறது.

தற்போது மத்திய அரசு மின்சார சட்டத்திருத்த வரைவு மசோதா கொண்டு வந்தால், தமிழக அரசின் கொள்கை முடிவின்படி அறிவித்து கடைபிடிக்கப்பட்டு வரும் விவசாயத்திற்கு இலவச மின்சாரம், வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம், குடிசைகளுக்கும் பசுமை விடுகளுக்கும் இலவச மின்சாரம் போன்றவை அளிக்க இயலாமல் போகும். மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். அதோடு தமிழகம் பல்வேறு நடைமுறை சிக்கலுக்கு ஆளாகும் சூழல் உருவாகும். மேலும், தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் அதிகளவில் உள்ளன. அவர்களும் மிகுந்த சிரமத்திற்கும் பெரும் பொருளாதார இழப்புக்கும் உள்ளாவார்கள்.

ஆகவே மத்திய அரசு தமிழக மக்களின் அடிப்படை தேவையான மின்சார நுகர்வுக்கு பங்கம் வராமல் மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதோடு தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த ஆக்கபூர்வமான நியாயமான பல்வேறு கோரிக்கைகளையும் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. அவற்றையும் பரிசீலனை செய்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x