Published : 09 Jul 2020 04:20 PM
Last Updated : 09 Jul 2020 04:20 PM

நமது பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிக்க இதுவரை என்ன செய்துள்ளீர்கள்?- மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சித்த மருத்துவர்கள் யாரேனும், கரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்தால், அதனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அரசு, சந்தேக பார்வையை விரிப்பது ஏன் என உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம், கரோனா நோய்த் தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக முதல்வர் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாகவும் சமூக ஊடகங்களில் கூறும் காட்சிகள் பரவியது.

இதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் விதிகள் மீறல் சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பியதாக, திருத்தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருத்தணிகாச்சலம் சார்பில் தந்தை கலியபெருமாள் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தணிகாச்சலம் தான் ஒரு பாரம்பரிய மருத்துவர் என்றும் கடலூர் வருவாய்த்துறை தனக்கு முறையான சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டு, கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே தான் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.

தன்னை குண்டர் சட்டத்தில் அடைக்க பின்பற்றப்பட்ட நடைமுறைகளை விதிமீறல்கள் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டு விடுவிக்க கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வந்தது.

திருத்தணிகாசலம் தாக்கல் செய்த வழக்கு குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு அரசுக்கு சராமாரி கேள்விகளை எழுப்பியது,

நமது பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிக்க இதுவரை என்ன செய்துள்ளீர்கள்? சித்த மருத்துவர்கள் யாரேனும், கரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்தால், அதனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அரசு, சந்தேக பார்வையை விரிப்பது ஏன்?

கரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்? அதனை பரிசோதித்ததில் எத்தனை மருந்துகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக தெரியவந்துள்ளது? அவற்றில் எத்தனை மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது?

தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? தமிழகத்தில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான நிபுணர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனரா?

மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, சித்தா துறை வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு செலவிட்டுள்ளது? இவற்றுக்கான முறையான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? என அடுக்கக்கான கேள்விகளை எழுப்பினர்.

நம் நாட்டு மருத்துவர்களுக்கு போதிய கட்டமைப்பையும், உரிய பண உதவியும் செய்து அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவு பிறப்பித்து மத்திய மாநில அரசுகள் ஜுலை 23-ல் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x