Published : 09 Jul 2020 02:23 PM
Last Updated : 09 Jul 2020 02:23 PM
வெளிமாநிலத் தொழிலாளர்களை நம்பித்தான் தமிழகம் பிழைக்கக்கூடிய நிலை உள்ளதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய இடம், உணவு உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றமும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இந்த உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் முறையிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று (ஜூலை 9) மீண்டும் விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர், தமிழக அரசு, குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்க உத்தரவிட்டுள்ளது என்றும், அதேபோல, குடும்ப அட்டை இல்லாத வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
மேற்கு வங்க அரசு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயத் தொழிலுக்குக் கூட வெளிமாநிலத் தொழிலாளர்களை நம்பித்தான் இருக்க வேண்டிய சூழல் இருப்பதாகத் தெரிவித்தனர். வெளிமாநிலத் தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழகம் பிழைக்காது என்ற சூழ்நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
பல நிறுவனங்கள் வெளிமாநிலத் தொழிலாளர்களை நம்பித்தான் செயல்படுவதாகவும், அவர்கள் இல்லாததால் தற்போது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
குடும்ப அட்டை இல்லாத வெளிமாநிலத் தொழிலாளர்கள், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பிய தொழிலாளர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசு வருகிற திங்கட்கிழமை (ஜூலை 13) பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT