Published : 09 Jul 2020 02:11 PM
Last Updated : 09 Jul 2020 02:11 PM
புதுச்சேரியில் இன்று அதிகபட்சமாக 772 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் 49 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூலை 9) மேலும் 49 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,200 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 565 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 619 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று கூறியதாவது:
"புதுச்சேரியில் அதிகபட்சமாக 772 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது 49 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 42 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 7 பேர் ஜிப்மரிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்கால், மாஹே, ஏனாமில் யாரும் இன்று தொற்றால் பாதிக்கப்படவில்லை. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர். வில்லியனூர் சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண், ஏற்கெனவே சிறுநீரக பாதிப்பும், ரத்த அழுத்தமும் உள்ளவர். அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று (ஜூலை 8) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல், காரைக்காலில் 60 வயது ஆண், நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 373 பேர், ஜிப்மரில் 111 பேர், கோவிட் கேர் சென்டரில் 27 பேர், காரைக்காலில் 32 பேர், ஏனாமில் 20 பேர், மாஹேவில் 2 பேர் என 565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 14 பேர், ஜிப்மரில் 4 பேர், கோவிட் கேர் சென்டரில் 12 பேர், மாஹேவில் 5 பேர் என மொத்தம் 35 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உள்ளது.
இதுவரை 22 ஆயிரத்து 743 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 21 ஆயிரத்து 242 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 253 பரிசோதனைகளுக்கு முடிவு வர வேண்டியிருக்கிறது. 2 நாட்களில் மேலும் ஒரு நடமாடும் குழு மூலம் கிராமப்புறங்களில் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் எளிதாக நிறைய பரிசோதனைகள் செய்ய முடியும்.
இன்று காலை நான் நடைப்பயிற்சி சென்றபோது நிறைய பேர் என்னைச் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்துவது நல்லது என்று கூறினார்கள். வாரத்தில் ஒரு நாள் ஊரடங்கை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது. எனவே, மீண்டும் ஒரு முறை முதல்வரிடம் ஊரடங்கை அமல்படுத்த வலியுறுத்துவேன்.
நான் தொகுதி வாரியாகச் சென்று பார்த்தபோது நிறையப் பேர் முகக்கவசம் அணியவில்லை. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. கைகளை சோப்பு போட்டுக் கழுவுவது குறைவாக உள்ளது. அரசால் அறிவுறுத்ததான் முடியும். அதனை மக்கள்தான் கடைப்பிடிக்க வேண்டும். ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக வரும் என்று கூறப்படுகிறது.
எனவே, மக்கள் சிறிது யோசித்துப் பார்க்க வேண்டும். கரோனா தொற்றுக்கு முன்பு எப்படி பொது இடங்களில் கூட்டம் இருந்ததோ அதேபோல் கூட்டம் தற்போதும் இருக்கிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு வரும். எனவே, பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஆளுநர் மாளிகையில் மேலும் ஒருவருக்குத் தொற்று
ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு 2 தினங்களுக்கு முன்பு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உட்பட ராஜ்நிவாஸில் பணியாற்றிய 37 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் துணைநிலை ஆளுநருக்குத் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், ஆளுநர் மாளிகையில் புதிதாக மேலும் ஒருவருக்குத் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், முதல்வர் அலுவலகம், அமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலகம், துறை இயக்குநர் அலுவலகங்களில் நமக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இதுபோன்ற பாதிப்பு வராது. மக்களுக்குச் சேவை செய்யவே நாம் உள்ளோம்".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT