Published : 09 Jul 2020 10:11 AM
Last Updated : 09 Jul 2020 10:11 AM

வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு தமிழக அரசு அநீதி; வைகோ கண்டனம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

சென்னை புழல் சிறையில் இருக்கும் 129 வெளிநாட்டு முஸ்லிம்கள் மீதான வழக்கை முடித்து வைத்து, அவர்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூலை 9) வெளியிட்ட அறிக்கை:

"டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்ட முஸ்லிம்களில் பலர் திரும்பிச் சென்றுவிட்டனர். தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் கைது செய்யப்பட்டு, முதலில் சென்னை புழல் சிறையில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் சைதாப்பேட்டையில் உள்ள கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டார்கள்.

சைதாப்பேட்டை கிளைச் சிறை வெளிநாட்டினர் அடைக்கப்படுவதற்கு அறிவிக்கப்பட்ட சிறை அல்ல. இது தமிழக அரசின் முதல் விதிமீறல் ஆகும்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவிக்கக் கோரும் 12 வழக்குகளில், கைது செய்யப்பட்ட 98 வெளிநாட்டு தப்லீக் ஜமா அத் அமைப்பினருக்குப் பிணை வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவித்துவிட்டு, சென்னை மாநகருக்குள் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், சொந்தப் பிணையில் இவர்களை விடுவிக்க நீதிமன்றங்கள் ஆணையிட்டன.

ஆனால், இவ்வாறு பிணை வழங்கப்பட்டவர்கள் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலிருந்து மீண்டும் சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தடுப்பு அல்லது சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை உள்ளடக்கிய அறிவிக்கையை 2019 ஜனவரி 9 இல் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளில், சிறப்பு முகாம்கள் சிறை வளாகத்திற்குள் அமைந்திருக்கக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், அவர்களுக்கு தனி சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது. ஆனால், பிணையில் விடுவிக்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு, புழல் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு வழங்கப்படுகின்றது.

இந்த அறிவிக்கையில், இப்படிப்பட்டவர்களுக்குப் போதுமான இடவசதியும், காற்று, வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அங்கு இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் வழிகாட்டு அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், 40 நபர்கள் தங்கக்கூடிய இடத்தில் 12 பெண்கள் உட்பட 129 நபர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளார்கள்.

சுருக்கமாக, தடுப்பு அல்லது சிறப்பு முகாம்களுக்கு மத்திய அரசு வகுத்துள்ள அனைத்து வழிமுறைகளை எல்லாம் மீறும் வகையில் கடந்த 64 நாட்களுக்கு மேலாக வெளிநாட்டு முÞலிம்கள் புழல் சிறை வளாகத்திற்குள் தங்கவைக்கப்பட்டு உள்ளார்கள்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, எஞ்சிய 4 பெண்கள் உட்பட, 31 வெளிநாட்டினர் தொடர்பான வழக்கில் கடந்த ஜூன் 12 அன்று, அவர்களுக்குப் பிணை வழங்கியதுடன், அவர்களை புழல் சிறையில் வைத்தது சரியில்லை என்றும், சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரபி கல்லூரியிலோ அல்லது வேறு நல்ல இடத்திலோ தங்க வைக்க அரசு பரிசீலிக்கலாம் என்றும், அவர்கள் கரோனா பரப்பியதற்கான ஆதாரம் இல்லை என்றும் விசா விதிமுறை மீறலுக்காக போதுமான தண்டனை அனுபவித்துவிட்டார்கள் என்றும், இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால் அவர்கள் வழக்கை முடித்து, அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இதன் பின்னரும் இந்த வெளிநாட்டினரை கரோனா பரவியுள்ள புழல் சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்தவிதமான சட்டபூர்வமானது அல்ல. தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறி வருகிறது.

இந்தியாவில் வேறு எங்கும் இந்த நிலை இல்லை.

கரோனா முழு முடக்கம் அறிவிக்கப்பட்டவுடன், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆன்மீகச் சுற்றுப்பயணம் வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சில மாநிலங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்கள். பல மாநிலங்களில் அவர்கள் கைது செய்யப்படாமல் தனியார் இடங்களில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

பெங்களூருவில் ஹஜ் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார்கள். ஹைதராபாத்தில் பள்ளிவாசலில் தங்கவைக்கப்பட்டார்கள். மும்பையில் அவர்களது தூதரங்களில் ஒப்படைக்கப்பட்டார்கள். தலைநகர் டெல்லியில் 10 வெவ்வேறு தனியார் இடங்களில் தங்கவைக்கப்பட்டார்கள். உத்தரப்பிரதேசத்தில்கூட தமிழக அரசு செய்த அராஜகம் நடைபெறவில்லை.

இந்தோனேசியா, பிரான்ஸ், மலேசியா, தாய்லாந்து போன்ற நமது நட்பு நாடுகளின் குடிமக்கள் மீது ஒன்றன்பின் ஒன்றாக விதிமீறல்களைச் செய்து வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு எடப்பாடி அரசு அநீதி இழைத்துள்ளது.

129 வெளிநாட்டு முஸ்லிம்களை புழல் சிறையிலிருந்து உடனடியாக விடுவித்து, சுகாதாரமான சிறுபான்மைக் கல்வி நிறுவன விடுதிகளுக்கு மாற்றப்பட வேண்டும்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜூன் 12 அன்று வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், சென்னை புழல் சிறையில் இருக்கும் 129 வெளிநாட்டு முஸ்லிம்கள் மீதான வழக்கை முடித்து வைத்து, அவர்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்"

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x