Published : 09 Jul 2020 09:46 AM
Last Updated : 09 Jul 2020 09:46 AM
கரோனா பரவலை தடுக்க கிராமப்புறங்களில் இருந்து விழுப்புரம் நகரத்திற்குள் வர இன்று முதல் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (ஜூலை 8) வரை விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,339 ஆக உள்ளது. 760 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 561 பேர் சிகிச்சையில் உள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தனிநபர் இடைவெளியை சரியாக கடைபிடிக்காததால் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக, விழுப்புரம் நகரில் அதிகமானோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையிலும், கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி விழுப்புரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்று (ஜூலை 9) முதல் விழுப்புரம் நகரத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், அரசு, தனியார் ஊழியர்களையும், மருத்துவ சிகிச்சை தொடர்பாக வருபவர்களை மட்டும் காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர். அதேபோல், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்களும் நகருக்குள் வர அனுமதிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT