Published : 08 Jul 2020 07:34 PM
Last Updated : 08 Jul 2020 07:34 PM
கோவையில் 'கரோனா கொல்லி மைசூர்பா' விற்பனை செய்யப்படுவதாக கடை முகவரியுடன் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வந்தது. இதையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர், சித்த மருத்துவர் குழுவினர் கோவை சின்னியம்பாளையத்தை அடுத்த தொட்டிபாளையத்தில் செயல்படும் 'ஸ்ரீராம் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ்' என்ற கடையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது எந்தவொரு முன் அனுமதியும் பெறாமல் மூலிகை மைசூர்பா, கரோனா கொல்லி மைசூர்பா என்று கூறி 50 கிராம் மைசூர்பா பாக்கெட்டுகளை, பாக்கெட் ரூ.50-க்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
இது தொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
''கரோனா கொல்லி மைசூர்பாவில் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தகத்தை, திரிபாலா, மஞ்சள், முருங்கை இலை, அகத்தி இலை, கற்பூரவல்லி இலை ஆகியவை உள்ளடங்கிய 19 மூலிகைகள் உள்ளதாகவும், இந்த மைசூர்பா கரோனாவை ஒரே நாளில் குணப்படுத்தும் என்று கூறியும் விற்பனை செய்து வந்துள்ளனர். ஆய்வுசெய்தபோது கடையில் இருந்த 120 கிலோ மைசூர்பா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எந்தத் துறையிலும் அனுமதி பெறாமல் கரோனா கொல்லி மைசூர்பா என்று தவறான விளம்பரம் செய்து விற்பனை செய்ததற்காக உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடைக்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. மேற்கொண்டு அந்த கடையில் எந்தவித தயாரிப்பும், விற்பனையும் செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரோனா கொல்லி மைசூர்பா தயாரிக்கப் பயன்படுத்தியதாகக் கூறிய மூலப்பொருட்களின் மாதிரியைச் சேகரித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் பகுப்பாய்வுக்கு அனுப்ப உள்ளனர். கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு தமிழ்ச்செல்வன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT