Published : 08 Jul 2020 05:44 PM
Last Updated : 08 Jul 2020 05:44 PM
கோவையில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில், தொற்றுக்குள்ளானோர் வசிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
கோவை மாவட்டத்தில் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 800-ஐத் தாண்டிவிட்டது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும், கரோனா தொற்றுக்கு உள்ளானோரின் குடும்பத்தினர், அருகில் வசிப்போர், தொடர்பில் இருந்த நபர்கள் ஆகியோருக்குத் தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று உறுதிசெய்யப்படும் நபர்கள் வசித்துவரும் பகுதிகள் தனிமைப்படுத்தப்படுகின்றன. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேரடியாகப் பார்வையிட்டார்.
நேற்று முன்தினம் கோவை செல்வபுரம் பகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஆட்சியர், ஒரு தொழிற்கூடம் விதிமுறை மீறிச் செயல்பட்டதைக் கண்டறிந்தார். இதுகுறித்து அதன் உரிமையாளர்களிடம் விசாரித்தார். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் தந்ததால் கோபமான ஆட்சியர், “நாங்கள் இவ்வளவு பாடுபட்டுப் பணிபுரிகிறோம். கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறீர்களே” என்று கடிந்துகொண்டார். பின்னர் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யவும் உத்தரவிட்டார். இந்த அதிரடி நடவடிக்கை குறித்த வீடியோ வாட்ஸ்- அப் வழியாகப் பரவி பரபரப்பைக் கிளப்பியது.
தொடர்ந்து கரோனா விஷயத்தில் நேரடி நடவடிக்கைள் எடுத்துவருகிறார் ஆட்சியர். அந்த வகையில் இன்றும் அவரின் நடவடிக்கை தொடர்ந்தது.
தற்போது கோவை மாவட்டத்தில் 13 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் கோவை மாநகரப் பகுதிகளான சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர் மணியம் வேலப்பர் வீதி, காளியப்பன் வீதி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இன்று நேரில் பார்வையிட்டார் ஆட்சியர். அப்பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருக்கவும், அப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்பகுதிகளைத் தினமும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யவும் வலியுறுத்தினார். மேலும், அங்கு உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களிடம் அவர்களின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி உதவி ஆணையர் (மேற்கு) செந்திலரசன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT