Published : 08 Jul 2020 04:53 PM
Last Updated : 08 Jul 2020 04:53 PM
குமரி மாவட்ட உள்ளாட்சிகளில் கரோனா ஒழிப்புக்காக தெளிக்கப்பட்ட பிளீச்சிங் பவுடரில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக கன்னியாகுமரி தொகுதி திமுக எம்எல்ஏ ஆஸ்டின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று அவர் கொடுத்திருக்கும் மனுவில் கூறியிருப்பதாவது;
''கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி சாலையோரங்களிலும், வீடுகளைச் சுற்றியுள்ள தெருக்களிலும் பிளீச்சிங் பவுடர் தூவும் பணி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வேகமாக நடைபெற்று வருகிறது. அதற்காக, குமரி மாவட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாக பல ஆயிரம் டன் பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த பிளீச்சிங் பவுடர் பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டபோதும், குறிப்பாக, திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கெனவே தரமற்ற பிளீச்சிங் பவுடரை சப்ளை செய்ததாகக் கூறி நெல்லை மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள பிளீச்சிங் பவுடர் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்தும், அவற்றில் சுண்ணாம்புக் கழிவுப் பொருட்களை பிளீச்சிங் பவுடரோடு கலந்து சப்ளை செய்ததாகவும் தெரிகிறது. குடிநீர் தொட்டிகளில் பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடரில் 33% குளோரின் பயன்படுத்த வேண்டும். அதுபோல 1000 லிட்டர் குடிநீருக்கு 4.2 கிராம் என்ற அளவில் குளோரின் சேர்க்கப்படவேண்டும். மேல்நிலைத் தொட்டி குடிநீருக்கு குளோரின் அளவு 2 பி.பி.எம் அளவு இருக்க வேண்டும். தெரு மற்றும் வீட்டுக் குழாயில் 0.5 பி.பி.எம் இருக்க வேண்டும்.
ஆனால், கரோனா காலத்தில் அதிகமான பிளீச்சிங் பவுடர் உள்ளாட்சிகள் மூலம் வாங்கிப் பயன்படுத்தப்பட்டன. இந்த பிளீச்சிங் பவுடர் தரமானது நெல்லையில் உள்ள பொது சுகாதார நீர்பகுப்பாய்வு சோதனைக் கூடத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திலிருந்து மேற்படி தடை செய்யப்பட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிளீச்சிங் பவுடரில் 32%குளோரினுக்குப் பதிலாக 20% மட்டுமே இருந்துள்ளது. எனவே, அது குடிநீருக்குப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றது எனவும், குடிநீரில் உள்ள நோய்க் கிருமிகளை அழிப்பதற்கு இதைப் பயன்படுத்த முடியாது எனவும், இதன் கலவை பி.ஐ.எஸ் தர நிர்ணயம் அடிப்படையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலைகளிலும், தெருக்களிலும், கழிவுநீர் ஓடைப் பகுதியிலும் தூவப்படுகிற பிளீச்சிங் பவுடரில் குளோரின் அளவு 1.7% மட்டுமே இருந்துள்ளது. எனவே, இதுவும் கிருமிநாசினியாகப் பயன்படுத்த இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான சுண்ணாம்புக் கழிவில் குறைந்த அளவு பிளீச்சிங் பவுடரைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட கலவையை குமரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் டன் கணக்கில் கொள்முதல் செய்து சாலை ஓரங்களிலும்,தெருக்களில் தூவியும், கரோனா கண்டறியப்பட்ட இடங்களில் தண்ணீரீல் கரைத்து கிருமிநாசினியாகவும் தெளித்துள்ளன. இதில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்த முறைகேட்டில் உள்ளூர் ஆளும்கட்சி பிரமுகர் முதல் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் வரை பங்கு இருக்குமோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதேபோல் திருச்சியில் உள்ள கூட்டுறவு நிறுவனம் மூலம் பிளீச்சிங் பவுடர் தயாரிக்கப்பட்டு சப்ளை செய்யப்பட்டாலும், அங்கிருந்து கொள்முதல் செய்யாமல், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் நெல்லையில் உள்ள மேற்படி தடைசெய்யப்பட்ட நிறுவனத்தில் இருந்துதான் கொள்முதல் செய்துள்ளன. இந்த தரமற்ற பிளீச்சிங் பவுடரானது, கிருமிநாசினியாக எந்தவிதத்திலும் பயன் தராது. இந்தக் கொள்முதலானது எந்தவித ஒப்பந்தப்புள்ளியும் கோராமல், அரசின் நடைமுறையையும் சரியாகப் பின்பற்றாமல் நடைபெற்றுள்ளது.
எனவே, ஆட்சியர் உடனடியாக விசாரணை நடத்தி இந்த முறைகேட்டில் யார் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment