Published : 08 Jul 2020 04:36 PM
Last Updated : 08 Jul 2020 04:36 PM
கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 700 மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகளில் வேலைக்காகவும் கல்விக்காகவும் சென்றுள்ளவர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தைத் தொடங்கியது. அந்தத் திட்டத்தின் மூலம் வெளிநாடுளில் உள்ள இந்தியர்களை மீட்டுவந்தாலும் இன்னும் பல வெளிநாடுகளில் இந்தியர்கள் சிக்கி, தாயகம் திரும்ப முடியாமல் உள்ளனர் . குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் சிக்கி, வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிர்கிஸ்தான் நாட்டிற்கு மருத்துவக் கல்வி பயிலச் சென்றுள்ள தமிழக மாணவர்கள் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவு, குடிநீர், மருத்துவ வசதி என அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை அம்மாநில அரசுகள் மத்திய அரசின் உதவியோடு விமானம் மூலம் அழைத்துச் செல்வதாகவும் ஆனால், தமிழக அரசின் உதவி இல்லாத காரணத்தால் இன்றுவரை அம்மாணவர்கள் தவித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
எனவே கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கயுள்ள தமிழக மருத்துவ மாணவர்கள் 700 பேரை மீட்டு நாட்டிற்கு அழைத்து வர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தங்களை அளிக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்''.
இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT