Last Updated : 08 Jul, 2020 01:13 PM

 

Published : 08 Jul 2020 01:13 PM
Last Updated : 08 Jul 2020 01:13 PM

புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 112 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 1,151 ஆக அதிகரிப்பு: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்

புதுச்சேரி

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை யாரும் வெளியே வராத வகையில், முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், ஊரடங்குத் தளர்வுக்குப் பிறகு தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 27 ஆம் தேதி அதிகபட்சமாக 87 பேர் பாதிக்கப்பட்டனர். தினமும் சராசரியாக 40 பேர் முதல் 60 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை 8) எப்போதும் இல்லாத அளவுக்குப் புதிய உச்சமாக 112 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,151 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 553 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 584 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று கூறியதாவது:

‘‘புதுச்சேரியில் அதிகபட்சமாக இன்று 112 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 72 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 7 பேர் ஜிப்மரிலும், 25 பேர் காரைக்காலிலும், 8 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 553 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 34 பேர், ஜிப்மரில் 21 பேர், கோவிட் கேர் சென்டரில் 8 பேர், மாஹேவில் 2 பேர், பிற பகுதியில் 2 பேர் என மொத்தம் அதிகபட்சமாக 67 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 21 ஆயிரத்து 865 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 20 ஆயிரத்து 480 பரிசோதனைகள் நெகடிவ் என்று வந்துள்ளது. 447 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மார்க்கெட்டுக்கு வந்து செல்கின்றனர். இதே நிலை நீடித்தால் தொற்று பாதிப்பு அதிகமாகி அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் போய்விடும். இதன் காரணமாக, 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அறிகுறி தெரியாத கரோனா பாசிட்டிவ் உள்ள நோயாளிகள் 25 பேர் வீதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தனிமனி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையின்றி வெளியே நடமாட வேண்டம். மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே தொற்று பரவாமல் கட்டுப்படுத்த முடியும். கடந்த 25 ஆம் தேதி முதல் கிராமப்புறங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் கரோனா பரிசோதனைக்காக உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் தினமும் 100 பரிசோதனைகள் வருகின்றன. வருகின்ற சனி, ஞாயிறு வரை எந்தெந்த பகுதிகளில் கரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என நடமாடும் வாகனங்களுக்கு கால அட்டவணை போடப்பட்டுள்ளது. மேலும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மரில் பொதுமக்கள் பரிசோதனை செய்யப் பிடிக்கவில்லை என்றால், அந்தந்தப் பகுதியிலேயே பரிசோதனை செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை யாரும் வெளியே வராத வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என முதல்வரிடம் கூறியுள்ளேன். இதுதொடர்பாக இன்று அல்லது நாளைக்குள் முதல்வர் கண்டிப்பாக முடிவு எடுப்பார்’’.

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x