Published : 08 Jul 2020 11:38 AM
Last Updated : 08 Jul 2020 11:38 AM
கழிவுகளால் புதுச்சேரி அரியாங்குப்பம் உப்பனாறு மோசமான நிலையை எட்டி, மீன்கள் இறந்து மிதப்பது வாடிக்கையாகியுள்ளது. இப்பகுதியில் உள்ள மாங்குரோவ் காடுகளும் மோசமான சூழலை அடைவதுடன் கடல் நீருக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
புதுச்சேரியில் அரியாங்குப்பம் பகுதியில் உப்பனாறு ஓடுகிறது. புதுச்சேரியில் வாணிபத் தளமாக முன்பு இருந்த அரிக்கன்மேடு பகுதியை ஒட்டி இந்த ஆற்றில் படகுப் போக்குவரத்தும் அப்போது இருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆற்றின் இரு பகுதிகளிலும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. புதுச்சேரியின் இயற்கை படகுத்துறையான இந்தப் பகுதி தற்போது கழிவுநீரால் கூவமாகி வருகிறது.
நகரப்பகுதி கழிவுகளைத் திருப்பி விடுதலும், இறைச்சிக் கழிவுகளை ஆற்றில் கொட்டுவதும் முக்கியக் காரணம். அத்தோடு பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் காரணமாகவும் மாசு அதிகரித்துள்ளது. நீரில் வாழும் மீன்கள் இறக்கும் அளவுக்குக் கழிவுத்தன்மை அதிகரித்துள்ளது. அவ்வப்போது மீன்கள் இறந்து மிதப்பதை பலரும் பார்த்தபடி செல்கின்றனர். தற்போது மாங்குரோவ் காடுகளில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் பிளாஸ்டிக் பைகள் எமனாகின்றன. அத்துடன் மாசுபடிந்த ஆற்றுநீர் கடலுடன் கலப்பதால் கடல் நீருக்கும் ஆபத்து உண்டாகியுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் எம்.பி. ராமதாஸ் கூறுகையில், "ஆற்றில் மீன்கள் இறப்பதற்கான காரணம் அரசுக்கு நன்கு தெரிந்தும் இந்நிகழ்வைத் தடுப்பதற்கான முயற்சிகளை எடுப்பதற்கு யாருக்கும் அக்கறை இல்லை. அதனால்தான் சமீபத்தில் மத்திய அரசுக்குச் சமர்ப்பித்த ஆறுகளை மேம்படுத்தும் திட்டத்தில் புதுவை அரசின் சுற்றுச்சூழல் துறை அரியாங்குப்பம் ஆற்றைச் சேர்க்காமல் புறக்கணித்தது . அந்த ஆற்றைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமியிடம் கோரியபோது 2017- 18 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூபாய் ஒரு கோடி ஒதுக்கியும் எந்த வேலையும் நடைபெறவில்லை. மீண்டும் நினைவுபடுத்தியபோது 2019 -20 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் அதே ஒரு கோடி ரூபாயை ஒதுக்கினார். ஆனால், எந்தச் சுத்தம் செய்யும் பணியும் நடைபெறவில்லை. ஒதுக்கிய நிதி எங்கு சென்றது என்றும் தெரியவில்லை.
அரசின் மெத்தனத்தால் புதுச்சேரியின் பொதுச் சொத்துகளும், சுற்றுப்புறச் சூழலும் பாதிக்கப்படுகிறது என்பதற்கு இந்த அரியாங்குப்பம் ஆற்றின் இழிநிலை சிறந்த உதாரணமாகும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆற்றில் ஓடிய தண்ணீர்தான் அதைச் சுற்றியுள்ள எட்டு மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருந்தது. இங்கிருந்த மீன்பிடித் தொழில்தான் அந்தக் குடும்பங்களை நடத்துவதற்குக் குறைந்த வருமானத்தை அளித்துவந்தது. கரோனா காலத்தில் இங்கே மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவது அதைச் சுற்றியுள்ள ஊர்களில் மக்களிடையே நோய்ப் பரவலை உருவாக்கி கரோனா நோயின் வீரியத்தை அதிகரிக்கும்.
சுற்றுப்புறச் சூழல் பாதிப்பால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும். முதலில் முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர், துறைமுகத் துறை அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் இந்த ஆற்றினை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT