Published : 08 Jul 2020 07:40 AM
Last Updated : 08 Jul 2020 07:40 AM
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோரில் வானூர் அருகே தென்கோடிப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவரும் அடக்கம்.
நேற்று முன்தினம் இரவு அந்த நபர், மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸார் நள்ளிரவு 2 மணியளவில் அந்த நபரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர், மனைவி, குழந்தைகளுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.
நோய் தொற்றுடைய ஒருவர் தனித்திருப்பது அவசியம் என்று கூறி அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்து வந்தனர்.
மருத்துவர்கள் அவரிடம் விசாரித்தபோது, “கடைசியாக ஒருமுறை மனைவி, குழந்தைகளை பார்க்கலாம் என்று சென்றேன்” என்று கூறியுள்ளார். அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை உணர்ந்த மருத்துவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த பலரைப் பற்றி கூறியதுடன், அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை பற்றியும் எடுத்துக் கூறி ஆற்றுப்படுத்தினர்.
ஆனாலும், நேற்றிரவு அவர் மீண்டும் மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT