Published : 08 Jul 2020 07:14 AM
Last Updated : 08 Jul 2020 07:14 AM
கரோனா ஊரடங்கால் வேலை இழப்பு, வருமானம் பாதிப்பு, வாடகை கொடுக்க முடியாதது போன்ற காரணங்களால் சென்னைமற்றும் புறநகர் பகுதிகளில் பலரும் வாடகை வீட்டை காலிசெய்துவிட்டு சொந்த ஊருக்கு செல்வது அதிகரித்து வருகிறது.
கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த100 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் தொற்று அதிகம் இருப்பதால், இருமுறை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அலுவலகங்களை திறக்க அனுமதி வழங்கினாலும்,தொற்று அச்சத்தால் அலுவலகங்கள் திறக்கப்படவில்லை.
பல சிறுதொழில் நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர் குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளன. வருவாய் இல்லாத நிலையில், பலரும் வீடுகளை காலி செய்துகொண்டு சொந்த ஊருக்கு செல்வது அதிகரித்துள்ளது.
தாம்பரம் பகுதியில் இருந்துவீட்டை காலிசெய்து திண்டிவனத்துக்கு புறப்பட்ட குடும்பத்தினர் கூறும் போது, ‘‘அருகில் உள்ள தனியார்நிறுவனத்தில் வேலை செய்கிறோம். கடந்த 3 மாதங்களாக வேலை இல்லாததால் வருமானம் இல்லை. வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. 3 வேளை சாப்பிடுவதே சிரமமாக இருக்கிறது. எங்கள் நிறுவனத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு வேலை இல்லை என்று கூறிவிட்டனர். அதனால் வீட்டை காலிசெய்துசொந்த ஊருக்கு செல்கிறோம்’’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
கொடுங்கையூர் பகுதியில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘அரசு உத்தரவுக்கிணங்க வீட்டு உரிமையாளர் வாடகை கேட்டு தொந்தரவு செய்யவில்லை. ஆனாலும், இயல்புநிலை திரும்பிய பிறகு, அதை தரவேண்டி இருக்கும். குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்து, அதையும் சமாளிப்பது சிரமம். அதனால் வீடுகளை காலி செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.
இவ்வாறு பல குடும்பங்கள் வீடுகளை காலிசெய்து, சொந்த ஊர்களுக்கு செல்வதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலஇடங்களில் ‘வீடு வாடகைக்கு’பலகைகளை காணமுடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT