Published : 07 Jul 2020 08:07 PM
Last Updated : 07 Jul 2020 08:07 PM

சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது!- காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் எதிர்ப்பு

சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 'காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் - தமிழ்நாடு' சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தியாகு, செயலாளர் மீ.த.பாண்டியன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை வழக்கு குறித்து சிபிசிஐடி போலீஸார் புலனாய்வு நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், சிபிஐ இவ்வழக்கில் புலனாய்வை ஏற்றுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. தமிழக அரசு இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும் முடிவை அறிவித்தபோதே பல்வேறு தரப்பினரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ஏற்கெனவே இதுகுறித்துத் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து அறிவித்துள்ளது. சிபிசிஐடி புலனாய்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மனநிறைவு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சிபிஐ வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் சுட்டிக்காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது.

உயர் நீதிமன்ற வழிகாட்டுதலில் சிபிசிஐடி முயற்சியில், வழக்குப் புலனாய்வு சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை திருப்தியாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், சிபிஐ இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு செய்திருப்பதும், தமிழக அரசு அவ்வாறே சிபிஐ வசம் ஒப்படைக்க இருப்பதும் வலுத்த ஐயப்பட்டை ஏற்படுத்துகின்றன. சிபிஐ உதவியோடு வழக்கைத் திசைதிருப்ப அரசு முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

எனவே, தமிழக அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கூடாது என்றும், சிபிசிஐடி புலனாய்வு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் ‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் - தமிழ்நாடு’ சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x