Published : 07 Jul 2020 07:59 PM
Last Updated : 07 Jul 2020 07:59 PM
புதுச்சேரியில் தாசில்தார் கைது விவகாரத்தில் விதிகளை மீறிச் செயல்பட்ட சீனியர் எஸ்.பி. உள்ளிட்ட காவல்துறையினர் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும், அதிகபட்ச அபராதம் விதிக்கவும் காவல்துறை விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கின்போது புதுச்சேரியில் மதுபானக்கடைகள் மூடப்பட்டாலும் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை தொடர்ந்தது. அதுதொடர்பாக அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் தந்தார்.
இதையடுத்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இதில் தலையிட்டார். இரு வாரங்களுக்கு பிறகு மதுக்கடைகள் சீல் வைக்கப்பட்டு கடைகளில் உள்ள இருப்பைச் சரிபார்க்கும் பணி தொடங்கியது. இதற்காக அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. ஊரடங்கு தொடங்கியபோது இருந்த இருப்புக்கும் ஆய்வின்போது இருந்த மதுபான இருப்புக்கும் இடையிலான வித்தியாசம் இருந்ததால் உடனடியாக வழக்குப் பதிவானது. நூற்றுக்கணக்கான மதுபானக் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்தானது.
இதனிடையே ஆய்வுக்குச் செல்லும் அரசு அதிகாரிகள் குழுவும் மதுபானங்களை எடுத்துச் செல்வதாகப் புகார்கள் வந்தன.
அப்போது, கடந்த ஏப்ரல் 19-ல் புதுச்சேரி மடுகரையில் மதுக்கடை கணக்குச் சரிபார்ப்பின்போது மதுபானம் எடுத்துச் சென்றதாக தாசில்தார் கார்த்திகேயன் உட்பட 8 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் தாசில்தார் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். அப்போது இரவில் அவர் வீட்டில் சோதனையிட்டது தொடங்கி சட்டவிரோதக் காவலில் தாசில்தார் வைக்கப்பட்டதாகவும் பல புகார்களை அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் இவ்விவகாரத்தை முதல்வர் நாராயணசாமியிடம் முறையிட்டனர். இச்சூழலில் சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை முதல்வர் நாராயணசாமி கலைத்தார்.
அதைத் தொடர்ந்து, தாசில்தார் கார்த்திகேயன் தரப்புகளில் வந்த புகார்களை விசாரிக்க புதுச்சேரி ஆட்சியர் அருணுக்கு முதல்வர் உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின்படி உதவி ஆட்சியர் சுதாகர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இச்சூழலில், அறிக்கையின் அடிப்படையில் காவல்துறையினர் மீதான புகார்களை விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜாசூர்யா தலைமையிலான காவல்துறை விசாரணை ஆணையம் விசாரணையைத் தொடங்கியது.
விதிமுறைகளை மீறி வாரண்ட் இல்லாமல் தாசில்தார் கார்த்திகேயனைக் காவல்துறையினர் கைது செய்ததாகவும் வீட்டில் பெண்கள் உள்ள நிலையில் நள்ளிரவில் ஆண் போலீஸார் புகுந்து சோதனை நடத்தியதாகவும் புகாரில் கூறப்பட்டது. மேலும், ஏப்ரல் 19-ல் கைது செய்த நிலையில் 21-ம் தேதிதான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் உச்ச நீதிமன்ற விதிகளை மீறி சட்ட விரோதமாகக் காவலில் வைத்தனர் எனவும் பல புகார்கள் காவல்துறையினர் மீது கூறப்பட்டன.
புகார்கள் குறித்து விசாரணை நடத்திய காவல்துறை விசாரணை ஆணையம் தாசில்தார் கைது விவகாரத்தில் விதிகளை காவல்துறையினர் மீறியதை உறுதிப்படுத்தியுள்ளனர். சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால், எஸ்.ஐ.க்கள் ராஜேஷ், இனியன், ஏட்டு முரளிதரன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகபட்ச அபராதம் விதிக்கவும் டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணையில் சிபிஐ ஊரடங்கு காலத்தில் தடையை மீறி சில மதுபானக்கடை உரிமையாளர்கள் திருட்டுத்தனமாக மது விற்பனையில் இறங்கியது தொடர்பாகவும், அதற்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருந்தது தொடர்பாகவும் சிபிஐ தற்போது விசாரணை நடத்தி வருகிறது. அதனால் மதுபான உரிமம் தற்காலிகமாக ரத்தான ஏராளமான மதுக்கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT