Published : 07 Jul 2020 05:56 PM
Last Updated : 07 Jul 2020 05:56 PM
கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சித்த வைத்திய முறையில் மருத்துவம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 7) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரிக்குப் பெருமை சேர்த்த பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் இறந்த செய்தி கேட்டு நான் துயரமடைந்தேன். தமிழ் மொழிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவருக்குப் புதுச்சேரி அரசு சார்பில் கலைமாமணி, தமிழ்மாமணி விருது கொடுத்துக் கவுரவித்துள்ளோம். தமிழக அரசும் வ.உ.சி., கலைமாமணி விருது கொடுத்துக் கவுரவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தமிழ்ச்சங்கங்கள் அமைந்துள்ளன என்றால் அதனை உருவாக்கிய பெருமை மன்னர் மன்னனுக்கு உண்டு. முதன் முதலில் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அறிஞர் மன்னர் மன்னன் ஆவார். அவருடைய தந்தை சமாதியின் அருகிலேயே நினைவிடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை மாநில அரசின் சார்பில் செய்து கொடுத்துள்ளோம்.
தமிழுக்காவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் புதுச்சேரி மாநிலத்தில் மிகப்பெரிய பங்காற்றிய மன்னர் மன்னனின் மறைவு எங்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவின் பல மாநிலங்களில் கரோனா பரவலுக்கு சித்த வைத்திய முறையில் வைத்தியம் செய்யப்படுகிறது. நம்முடைய புதுச்சேரி மாநிலத்தில் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகளை வீடு வீடாகத் தொடர்ந்து கொடுத்து வருகிறோம். ஆஷா பணியாளர்கள், ஏ.என்.எம்.கள் அதனைச் செய்து வருகின்றனர். அதேபோல், கபசுரக் குடிநீரையும் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள் அலோபதி முறையில் மருத்துவம் செய்கின்றனர். சித்தா முறையில் மருத்துவம் செய்யும்போது மிக விரைவில் குணமடைவார்கள் என்ற எண்ணத்தைக் கருத்தில் கொண்டு ஆயுஷ் அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் கொடுப்பதற்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுடன் கலந்து பேசி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சித்த மருத்துவத்தில் சம்பந்தப்பட்டுள்ள மருத்துவர்களை அழைத்துப் பேசினோம்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன மருந்துகள் கொடுக்க வேண்டும் என்று கேட்டு அவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனைகள் செயல்படக் கூறியுள்ளோம். சித்த மருத்துவர்களையும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். சித்த வைத்தியம் மூலமாக எந்தவித பக்கவிளைவும் இருக்காது. நோயாளிகளும் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற அளவில் சித்த வைத்திய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.
இப்போது தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினோம். தனியார் மருத்துவக் கல்லூரிகளும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மரில் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்படுகிறது.
நடமாடும் மருத்துவ மையங்களை அமைத்து அதன் மூலம் உமிழ்நீர் எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்படுகிறது. இப்போது மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் போதாது. ஜிப்மரில் ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்ய வசதிகள் உள்ளன. நம்முடைய கல்லூரியில் 400 பேருக்குப் பரிசோதனை செய்யலாம். ஆனால், அதிகப்படியான உமிழ்நீர் எடுக்க அரசோடு தனியார் மருத்துவக் கல்லூரிகளும் ஒத்துழைக்க வேண்டும். அவர்களும் உமிழ்நீர் பரிசோதனை மையங்களை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அவர்களும் ஒருவாரத்தில் அமைப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பரவலாக மருத்துவப் பரிசோதனை செய்வதன் மூலம் கரோனா தொற்றை விரைவாகக் கண்டறிய முடியும். மேலும், கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கச் சொன்னால் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
அதன்படி, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் எழுத்துபூர்வமாக சுகாதாரத்துறையிடம் நோயாளிகளை அனுப்பினால் மருத்துவம் பார்க்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர். கரோனாவைத் தடுக்க தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
புதுச்சேரி, உழவர்கரை, பாகூர், வில்லியனூர் ஆகிய 4 பகுதிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து மருத்துவ மையங்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களைக் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தோம். நேற்று அவர்களுடன் கூட்டத்தை நடத்தினோம். அப்போது அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அவர்களும் அதனைச் செய்வதாகக் கூறியுள்ளனர்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT