Published : 07 Jul 2020 05:17 PM
Last Updated : 07 Jul 2020 05:17 PM
சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ரோஹித்நாதனுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 600-ஐ கடந்ததால் வர்த்தகர்கள் சுய கட்டுப்பாடுகளை தங்களுக்கு தாங்களே விதித்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 550-க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர். தற்போது 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ரோஹித்நாதன் உட்பட 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை காந்திவீதியில் உள்ள வணிகவளாக உரிமையாளருக்கும், அவரது மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கடை மூடப்பட்டது.
கடையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவிட்டார். மேலும் இளையான்குடி, தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த இருவர் கரோனாவால் இறந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று 600-ஐ கடந்ததால், சிவகங்கை நகர் வர்த்தக சங்கத்தினர் தாங்களே சுயக்கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டனர்.
அதன்படி நாளை (ஜூலை 8 ) முதல் ஜூலை 15-ம் தேதி வரை மருந்தகங்கள், பால் விற்பனையகம், உணவகங்கள் தவிர மற்ற கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். ஏற்கெனவே சிங்கம்புணரி பகுதியிலும் இதே கட்டுப்பாட்டை வர்த்தகர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT