Published : 07 Jul 2020 03:41 PM
Last Updated : 07 Jul 2020 03:41 PM
சென்னை ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட 35 குழந்தைகள் குணமாகிவிட்டனர். தமிழகத்தில் குழந்தைகள் காப்பகத்தில் புதிதாக கரோனா தொற்று இல்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை ராயபுரத்தில் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அது தொடர்பான செய்திகளை வைத்து, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கரோனா தொற்று மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வழக்கு பதிந்ததோடு, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எங்கே உள்ளார் ? என கேள்வி எழுப்பினர். தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி இந்த விவகாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துவிட்டதாக தெரிவித்தார்.
அதேபோல பல்வேறு மாநிலங்கள் தரப்பில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இதனையடுத்து நீதிபதிகள் தமிழக அரசு வழக்கறிஞரிடம், ராயபுரம் காப்பகத்தில் தொற்று ஏற்பட்டு பாதிப்படைந்த அனைத்து குழந்தைகளும் குணமடைந்து விட்டனரா ? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழக வழக்கறிஞர், அனைத்து குழந்தைகளும் குணமடைந்து விட்டனர் , தற்போது அவர்கள் மீண்டும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஏதேனும் குழந்தைகளுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு உள்ளதா?” என கேட்டனர். அதற்கு தமிழக அரசு வழக்கறிஞர், “இல்லை, எந்த குழந்தைகளுக்கு புதிதாக தொற்று ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்..
இதனையடுத்து நீதிபதிகள், உ.பி, பஞ்சாப், உத்தரகண்ட், திரிபுரா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்கள் பதில் மனுவை ஏன் தாக்கல் செய்யவில்லை ? என கேள்வி எழுப்பியதோடு, பதில் மனு தாக்கல் செய்யாத அனைத்து மாநிலங்களும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் அவர்கள், உ.பி மாநிலம் கான்பூரில் உள்ள அரசு காப்பக குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தி உண்மையா ? என வினவினர். அதற்கு பதிலளித்த உ.பி. அரசு வழக்கறிஞர் கரிமா பர்ஷத் இந்த விவகாரம் தொடர்பாக அரசிடம் கேட்டு விளக்கமளிக்கிறோம் என தெரிவித்தார்.
அதைதொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் "கவுரவ் அகர்வாலை" நியமிக்கிறோம், இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை திங்கட்கிழமை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT