Published : 07 Jul 2020 12:47 PM
Last Updated : 07 Jul 2020 12:47 PM
ஓசூர் நகரப் பகுதி மற்றும் தொழிற்பேட்டைப் பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் நடமாடும் ஏடிஎம் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
ஓசூரில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஓசூர் உழவர் சந்தையில் காலை நேரத்தில் குவிந்து வந்த மக்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, நகரப் பகுதியை இணைக்கும் பிரதான சாலை சந்திப்புகளில் உழவர் சந்தை கிளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் காய்கறிகளை வாங்கிச் செல்ல பொதுமக்கள் நகரப்பகுதிக்கு அதிக அளவில் வந்து செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களின் வீடுகளின் அருகே சென்று விற்பனை செய்யும் வகையில் மாநகராட்சி சார்பில் வாகனங்களில் நடமாடும் காய்கறி விற்பனை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஓசூரைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து ஏடிஎம்மில் பணம் எடுக்க, நகரப்பகுதியில் குவியும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஓசூரில் உள்ள தனியார் வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக வாகனத்தின் பின்பகுதியில் இடவசதி செய்யப்பட்டு ஓர் ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. மின்விசிறி வசதியுடன் படிகளில் ஏறிச்சென்று பணம் எடுக்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் ஏறிப் பணம் எடுப்பதற்கு முன்பாக, கைகளைச் சுத்தம் செய்துகொள்ள சானிடைசர் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் ஓட்டுநரும், ஒரு காவலாளியும் பணியில் உள்ளனர். இந்த நடமாடும் ஏடிஎம் வாகனம் ஓசூர் நகரில் உள்ள மகாத்மா காந்தி சாலை, வட்டாட்சியர் அலுவலக சாலை, நேதாஜி சாலை உள்ளிட்ட பிரதான சாலை சந்திப்புகளிலும், ஏடிஎம் வசதியில்லாத இடங்களிலும் மற்றும் சிப்காட் - 1 மற்றும் சிப்காட் - 2 ஆகிய தொழிற்பேட்டைகளிலும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பணம் எடுப்பதற்கு வசதியாக நிறுத்தப்படுகிறது.
இந்த நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் அனைத்து வங்கி அட்டைகள் மூலமாகவும் பணம் எடுக்கும் வசதி உள்ளதால் ஓசூர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT