Published : 07 Jul 2020 12:32 PM
Last Updated : 07 Jul 2020 12:32 PM

திருச்சி சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம்; வக்கிரமான மனித மிருகங்கள்: ராமதாஸ் வேதனை

சென்னை

இளம்பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. நமது குழந்தைகள் எவ்வளவு மோசமான, வக்கிரமான மனித மிருகங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நினைக்கவே வெட்கமாக உள்ளது என ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“திருச்சியை அடுத்த அதவத்தூர்பாளையத்தில் 14 வயதுச் சிறுமி, அவரது வீட்டுக்கு அருகிலேயே உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அக்கறை காட்டி பாதுகாக்கப்பட வேண்டிய மழலை மொட்டுகள் மனித மிருகங்களால் சீரழிக்கப்படும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது; இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

அதவத்தூர்பாளையத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் குப்பையைப் போட்டுவிட்டு வருவதற்காகச் சென்றபோது மாயமாகியிருக்கிறார். அடுத்த பல மணி நேரம் கழித்து அச்சிறுமியின் உடல் எரிந்த நிலையில் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியைச் சேர்ந்த சில மனித மிருகங்கள் அச்சிறுமியைச் சீரழித்து கொலை செய்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வேலூரை அடுத்த பாகாயத்தில் 10 ஆம் வகுப்பு மாணவியை, அவர் குளிக்கும் போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் படம் எடுத்து தங்களின் பாலியல் தேவைகளுக்கு உடன்பட வேண்டும் என்று மிரட்டியதால் அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது, செய்யூர் அருகில் இளம்பெண் ஒருவர் திமுக நிர்வாகிகளால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் 7 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது என இளம்பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது.

நமது குழந்தைகள் எவ்வளவு மோசமான, வக்கிரமான மனித மிருகங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நினைக்கவே வெட்கமாக உள்ளது.

திருச்சி அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறையினரின் விசாரணை திருப்தி அளிக்கிறது. கொலையாளிகளைக் கண்டுபிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐயத்தின் அடிப்படையில் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, அவர்களுக்குச் சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தரவும், இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதைத் தடுக்கவும் தமிழக அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோரும் தங்களின் குழந்தைகளை யாரையும் நம்பாமல் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x