Published : 07 Jul 2020 10:45 AM
Last Updated : 07 Jul 2020 10:45 AM
'கிரீமிலேயரை' மதிப்பிட சம்பளத்தையும் கணக்கில் சேர்க்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான 'கிரீமிலேயர்' வரம்பை தீர்மானிப்பதில் சம்பளத்தையும் சேர்த்துக் கொள்ளும் மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொள்வது என்ற முடிவை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கைவிட வேண்டும், மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்ப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பகவான்லால் சானி மற்றும் துணைத்தலைவர், உறுப்பினர்கள் ஆகியோருக்கு ராமதாஸ் இன்று (ஜூலை 7) எழுதிய கடிதம்:
"இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு பெறும் உரிமையை மத்திய அரசு பறிக்க நினைக்கும் நிலையில், அதற்கு துணை போகும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எடுத்துள்ள நிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆணையத்தின் நிர்வாகிகளான தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களை பாதிக்கும் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கோருவதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நான் இந்தியாவில் சமூகநீதிக்காக தீவிரமாக போராடி வரும் பாமகவின் நிறுவனர் ஆவேன். தமிழ்நாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக இரு வகையான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு காரணமானவர். 2000-வது ஆண்டில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர் என்ற முறையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தவறான நிலைப்பாட்டை சுட்டிக் காட்டுவது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தேசிய அளவில் ஓபிசி வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு, ஆண்டு வருவாய் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. அதற்கும் கூடுதலான வருவாய் ஈட்டும் குடும்பங்கள் 'கிரீமிலேயர்கள்' என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
'கிரீமிலேயர்' வரம்பைக் கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று 1993-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், இப்போது சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் 'கிரீமிலேயரை' தீர்மானிக்க கணக்கில் கொள்ளப் போவதாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த சமூகநீதிக்கு எதிரான செயலுக்கு பாமக சார்பில் நான் தான் முதன்முதலில் கடும் எதிர்ப்பை பதிவு செய்தேன்.
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் மார்ச் மாதத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு குறிப்புரை ஒன்றை அனுப்பியது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் இந்த நிலைப்பாடும் என்னைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை அளித்தது. அதன்மூலம் மத்திய அரசின் திட்டம் முறியடிக்கப்படும் என்று ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களும் நம்பினார்கள்.
ஆனால், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது நிலையிலிருந்து திடீரென பின்வாங்கியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கூட்டத்தில், 'கிரீமிலேயரைக்' கணக்கிட சம்பளமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கான எதிர்ப்பை திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்ப ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதன் எதிர்ப்பை திரும்பப் பெற்றால், 'கிரீமிலேயரை' தீர்மானிக்க, பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானங்களுடன், சம்பளமும் கணக்கில் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் முடிவு அரசாணையாக வெளியிடப்பட்டுவிடும். அவ்வாறு வெளியிடப்பட்டால் மாத வருமானம் ரூ.67 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ள குடும்பங்கள் 'கிரீமிலேயராக' கருதப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும்.
ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும் கடைநிலை அரசுப் பணியில் இருந்தால் கூட, அவர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது. ஒருவேளை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளவாறு 'கிரீமிலேயர்' வரம்புக்கான வருமானம் ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டால் கூட எந்த பயனும் இருக்காது. இதை விட, ஓபிசி வகுப்பினருக்கு மிக மோசமான சமூக அநீதியை இழைக்க முடியாது.
'கிரீமிலேயர்' வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு வகையில் அது அபத்தமான பரிந்துரையின் அடிப்படையிலானது ஆகும். அது குறித்து ஒரு சிறிய விளக்கத்தை அளிப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
1993-ம் ஆண்டு அலுவலக குறிப்பாணையின்படி மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் பிற பிற்படுத்தப்பட்டோரின் ஊதியத்தை 'கிரிமீலேயரை' கணக்கிடுவதற்கு மத்திய அரசு சேர்ப்பதில்லை. அதே நேரத்தில் வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற பிற்படுத்தப்பட்டோரின் ஊதியத்தை 'கிரிமீலேயரை' கணக்கிடுவதில் சேர்த்து அதிகாரிகள் குழப்பம் விளைவித்தனர். அதனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கணவன், மனைவி மாதம் தலா ரூ.33 ஆயிரத்து 500 ஊதியம் கிடைக்கும் பொதுத்துறை நிறுவன பணிகளில் இருந்தால் கூட, அவர்கள் 'கிரிமீலேயர்'களாக கருதப்பட்டு, அவர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த அபத்தனமான நடைமுறையால் 2012-ம் ஆண்டில் 12 பேருக்கும், 2015-ம் ஆண்டில் 11 பேருக்கும், 2017-ம் ஆண்டில் 29 பேருக்கும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகள் மறுக்கப்பட்டன. இவர்கள் தவிர நூற்றுக்கணக்கான பிற்படுத்தப்பட்டோருக்கு பிற குடிமைப்பணிகள் மறுக்கப்பட்டன. இது குறித்த வழக்குகளை விசாரித்த சென்னை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்கள், மத்திய அரசு கடைபிடிக்கும் புதிய முறை பாரபட்சமானது என்றும், அதைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த காலங்களில் ஆணையிட்டன.
அதனடிப்படையில் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் குடும்பங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை களைய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு தான் இப்படி ஒரு அபத்தமான பரிந்துரையை அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுப் பணிகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் எவ்வாறு 'கிரீமிலேயரை' கணக்கிடுவதில் சேர்க்கப்படுவதில்லையோ, அதேபோல் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களின் ஊதியமும் 'கிரீமிலேயரை' கணக்கிடுவதில் சேர்க்கப்படக்கூடாது என்று அந்த வல்லுநர் குழு பரிந்துரை செய்து, அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருந்தால், இந்த சிக்கல் சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஒரு பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்குவதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, அதை செய்யாமல் அனைத்துத் தரப்பினருக்கும் அநீதியை இழைக்கும் வகையில் அளித்த பரிந்துரை தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். இதை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசிடம் சுட்டிக்காட்டி , இச்சிக்கலுக்கு சுமூகத் தீர்வு கண்டிருக்க வேண்டும்.
அதற்கு மாறாக மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எடுத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இப்படி ஒரு முடிவுக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வாறு வந்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 338-பி பிரிவின்படி அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்ட அமைப்பாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் 338பி(5) உட்பிரிவின்படி தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு 6 முக்கியக் கடமைகள் உள்ளன. 'கிரீமிலேயர்' தொடர்பான விவகாரத்தில், முதல் இரு கடமைகள் மிகவும் முக்கியமானவை ஆகும்.
அவற்றின் விவரம் வருமாறு:
அ. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அல்லது அப்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு பிற சட்டங்கள் அல்லது அரசாங்கத்தின் எந்த ஒரு ஆணையின்படி சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வகுப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளைப் பற்றியும் ஆராய்தல், முறைப்படுத்துதல் மற்றும் அத்தகைய பாதுகாப்புகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்தல்.
ஆ. சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வகுப்புகளின் உரிமைகளும், பாதுகாப்புகளும் பறிக்கப்படுவதைப் பற்றிய குறிப்பிட்ட குறைகளை விசாரித்தல்.
'கிரீமிலேயர்' விவகாரத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மேற்கண்ட இரு கடமைகளையும் நிறைவேற்றியிருக்க வேண்டும். அவ்வாறு செய்ததா? இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டதா? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இதுதொடர்பான தகவல்களை ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்கு வழங்கவில்லை. இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதன் அரசியல் சட்டக் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.
2011-ம் ஆண்டில் ஜாட் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்ப்பது குறித்து மன்மோகன்சிங் அரசு யோசனை கேட்ட போது, 'ஜாட் சமூகத்தினர் சமூகரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்ல. அவர்களை அப்பிரிவில் சேர்த்தால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் பாதிக்கப்படும்' என்று கூறி, மத்திய அரசின் யோசனையை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்த்தது.
ஆனாலும், அதன் எதிர்ப்பை நிராகரித்து விட்டு, ஜாட் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்த்து 04.03.2014-ல் மத்திய அரசு அரசிதழ் அறிவிக்கை வெளியிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நிலைப்பாட்டை ஏற்று, ஜாட் சமூகம் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டது செல்லாது என்று 17.03.2015 இல் தீர்ப்பளித்தது.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு அது தான் உதாரணமாகும். அப்போது சட்டப்பூர்வ அமைப்பாக மட்டுமே இருந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய அரசின் தவறான நிலைப்பாட்டை அவ்வளவு கடுமையாக எதிர்த்த நிலையில், இப்போது அரசியல் சட்ட அமைப்பாக இன்னும் வலிமையானதாக மாறியுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 'கிரீமிலேயர் விவகாரத்தில்' மத்திய அரசின் முடிவை இன்னும் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், ஆணையம் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் முழுமையாக வழங்கப் படவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பான்மையினர் நிலமற்ற விவசாயக் கூலிகளாக இருக்கும் நிலையிலும், வணிக வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்காத நிலையிலும் மாத ஊதியம் ஈட்டும் பிரிவினரின் குழந்தைகளுக்கு மட்டும் தான் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
மத்திய அரசின் முடிவு ஏற்கப்பட்டால் அந்த குழந்தைகள் 'கிரீமிலேயர்' என்று முத்திரை குத்தப்பட்டு, அவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டு விடும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்வது தான் ஆணையத்தின் பணியே தவிர, இருக்கும் வாய்ப்புகளையும் பறிக்க துணை போவது அல்ல.
பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை காப்பது தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணியாகும். இதை உணர்ந்து 'கிரீமிலேயர்' வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதன் மூலம் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு அக்கடிதத்தில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT