Published : 07 Jul 2020 07:30 AM
Last Updated : 07 Jul 2020 07:30 AM
திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்றுவந்த பெரம்பலூரைச் சேர்ந்த 54 வயது சித்த மருத்துவர், திருச்சி ஜான் தோப்பு பகுதியைச் சேர்ந்த 57 வயது மூதாட்டி, கும்பகோணத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர், பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த 70 மற்றும் 64 வயது முதியவர்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஆகியோர் நேற்று உயிரிழந்தனர்.
மேலும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு வரப்பட்ட தில்லை நகரைச் சேர்ந்த 55 வயது முதியவர் மற்றும் கே.கே. நகரைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஆகியோர் ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. அவர்கள் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் திருச்சியில் நேற்று ஒரே நாளில் கரோனா பாதிக்கப்பட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 92 பேருக்கும், நேற்று 38 பேருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதனால், திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,004 ஆக அதிகரித்துள்ளது.
மகப்பேறு மருத்துவர் மரணம்: கரோனாவால் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த கும்பகோணத்தில் நர்சிங் ஹோம் நடத்தி வந்த 72 வயது பெண் மகப்பேறு மருத்துவர் நேற்று உயிரிழந்தார். மேலும், இவரது நர்சிங்ஹோமில் பணியாற்றிய 4 பெண்களுக்கும், உறவினர்கள் 4 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த 3-ம் தேதி உயிரிழந்த நிலையில் கிடந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது நபருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 24 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 7 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 58 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 55 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 41 பேருக்கும், புதுச்சேரி மாநிலத்தில் 62 பேருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT