

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 17 நாட்களுக்கு பிறகு முழு ஊரடங்கு நேற்று தளர்த்தப்பட்டது. இதனால், இறைச்சிக் கடைகள், செல்போன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் அதிக அளவில் வாகனங்களில் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மளிகை, காய்கறி கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. இறைச்சிக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பல்வேறு சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், முழு ஊரடங்கு 5-ம் தேதி இரவுடன் முடிந்ததால் சென்னை மாநகரம் முழுவதும், பெரு வணிக வளாகங்கள் தவிர பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
கடந்த 17 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டதால், அங்கு கூட்டம் அலைமோதியது. கோழி இறைச்சி கிலோரூ.240 வரையும், ஆட்டிறைச்சி ரூ.900-க்கும் விற்கப்பட்டது.
முழு ஊரடங்கின்போது, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வீட்டில் உள்ள அனைவரும் ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிட்டனர். ஆன்லைன் வகுப்புகளுக்கும் மாணவ, மாணவிகள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். பயன்பாடு அதிகரித்த நிலையில், அவை பழுதாகும் சூழ்நிலையும் ஏற்பட்டது. முழு ஊரடங்கு காலத்தில் பழுதான போன்களை சரிசெய்ய முடியாமல் அவதிப்பட்ட நிலையில், செல்போன் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
கடைகளில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா, மக்கள் முகக்கவசம்அணிந்து வருகிறார்களா என்றுமாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூட்டாக பல இடங்களில் ஆய்வு செய்தனர். பேக்கரிகள், இனிப்பகங்கள் திறக்கப்பட்டாலும், தயாரிப்புகள் குறைந்த அளவிலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மாவட்டத்துக்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை. கட்டுப்பாடுகளுடன் ஆட்டோ, டாக்ஸிகளை இயக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுப் போக்குவரத்தும் அறவேஇல்லாததால், கார்கள், ஆட்டோக்கள் நேற்று அதிக அளவில் ஓடின. பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த வாகனங்களில் வெளியில் பயணித்தனர். இதனால், சென்னையின் பல்வேறு சாலைகளில்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையில், முழு ஊரடங்கின்போது, விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் நேற்று போலீஸார் ஒப்படைக்க தொடங்கினர்.