Published : 06 Jul 2020 09:25 PM
Last Updated : 06 Jul 2020 09:25 PM
மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஜூலை 31-ம் தேதிக்குள் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு வாய்ப்புள்ளது, என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ அமையும் இடத்தை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் டிஜி.வினய் மற்றும் அதிகாரிகள் குழு சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் சுகாதாரத் துறை செயலாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கான சட்டபூர்வமான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது, தமிழகத்திற்கு கிடைத்த நல்ல செய்தி. மத்திய அரசு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கான ஒவ்வொரு சட்ட நடவடிக்கைகளையும் செய்து வருகிறது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல், இடம் தேர்வு, அடிக்கல் நாட்டுதல் என பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. வருவாய்த்துறை சார்பில் 274 ஏக்கர் நிலத்தை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசிடம் வழங்கியது.
மருத்துவமனை அமைய உள்ள இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ‘எய்ம்ஸ்’ பணிகளை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதனால்தான், மதுரையில் ‘கரோனா’ நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆய்வுக்கு வந்த ‘எய்ம்ஸ்’ பணிகளையும் சேர்த்து ஆய்வு செய்கிறேன். மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைவது தமிழகத்திற்கே மிகப்பெரிய மைல்கல்லாக அமையும்.
தென் மாவட்டங்களுக்கு இந்த மருத்துவமனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜூலை 31-ம் தேதிக்குள் ஜப்பான் நிறுவனத்துடன் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT