Published : 06 Jul 2020 06:22 PM
Last Updated : 06 Jul 2020 06:22 PM
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் புதுச்சேரியில் இன்று காலமானார். அவருக்கு வயது 92.
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மைந்தரும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி இன்று (ஜூலை 6) பிற்பகல் புதுச்சேரியில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்தார்.
புதுச்சேரி வானொலி நிலையம் மற்றும் சென்னை வானொலி நிலையங்களில் ஆசிரியராகப் பணியாற்றிய மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார். பல அமைப்புகளில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக் கட்டிடம் கட்டித்தந்தார்.
தமிழக அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி ,கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை மன்னர் மன்னன் பெற்றுள்ளார். மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்.
கவிஞர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி. மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றுள்ளார்.
தமிழறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகிய இவர் பெரியார், தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, தலைவர்கள் நெடுஞ்செழியன், க.அன்பழகன் போன்றவர்களுடன் பழகி அவர்களின் அன்பைப் பெற்றார். இவர் மனைவி சாவித்திரி, 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார்.
இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர். புதுச்சேரியில் நாளை (ஜூலை 7) மாலை 4 மணியளில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT