Published : 06 Jul 2020 06:19 PM
Last Updated : 06 Jul 2020 06:19 PM

வெகுவேகமாய்ப் பரவும் கரோனா! கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களிடம் 32  கேள்விகள் எழுப்பிய திமுகவினர்

கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் மனு அளித்த திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் எம்எல்ஏ, தென்றல் செல்வராஜ், முத்துசாமி. | படம்: ஜெ.மனோகரன்

கோவை

வெகுவேகமாய்ப் பரவும் கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களிடம் திமுகவினர் 32 கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில், புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் இன்று (ஜூலை 6) மனு அளித்தனர்.

இதுகுறித்து திமுக மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறும்போது, "கோவையில் கரோனா தொற்று வெகுவேகமாய்ப் பரவி வருகிறது. தினமும் எவ்வளவு பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன, எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்படுபவர்கள் தனியார் உணவகங்களில் தங்கும்போது, அவர்களிடம் அதிகம் பணம் வசூலிக்கப்படுகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தும் பொதுமக்களிடம் வசூல் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக 32 கேள்விகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளோம்" என்றார்.

இதேபோல, திமுக வடக்கு மாவட்டச் செயலர் க.செல்வராஜ், தெற்கு மாவட்டச் செயலர் இல.பத்மநாபன், மடத்துக்குளம் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் இன்று மனு அளித்தனர்.

அதில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை, அங்கீகரிக்கப்பட்ட சோதனை மற்றும் சிகிச்சை மையங்கள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருந்தின் பெயர், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் விவரங்கள், பரிசோதனை விவரங்கள் உள்ளிட்ட 32 கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறு அதில் வலியுறுத்தியிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x