Published : 06 Jul 2020 05:51 PM
Last Updated : 06 Jul 2020 05:51 PM
மதுரை மாநகராட்சியில் ‘கரோனா’ பரவல் கட்டுக்கடங்காமல் செல்வதால் நோய் தொற்று கண்டறியப்பட்ட 1,722 தெருக்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வீடு வருவதற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி 100 வார்டுகளில்தான் ‘கரோனா’ பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒரு வார்டு தப்பாமல் அனைத்து வார்களுக்கும் இந்த தொற்று நோய் பரவிவிட்டது.
தொடர்ந்து பாதிக்கப்பட்டோரைக் கண்டறிய 95 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் போடப்பட்டுள்ளது. முன்பு தொண்டைவலி காய்ச்சல், மூச்சு திணறல், உடல் சோர்வு இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது இதில் ஒரு அறிகுறியிருந்தாலே ‘கரோனா’ பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெருவாரியாக இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுத்து, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தற்போது ‘மைக்ரோ ப்ளான்’ திட்டத்தை தொடங்கியுள்ளது.
3 பேருக்கு குறைவாக கண்டறியப்பட்ட தெருக்கள், 3 முதல் 4 பேர் வரை மற்றும் 5 நபர்களுக்கு மேல் பாதிப்பு கண்ட தெருக்கள் கணக்கெடுக்கப்பட்டு, அப்பகுதியில் இருந்து மக்கள் மற்றொரு பகுதிக்குச் செல்லாதவாறு மாநகராட்சி அப்பகுதிகளை தடைசெய்து வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மதுரை மாநகராட்சியில் மொத்தம் 8,443 தெருக்கள் உள்ளன. இதில், 1,722 தெருக்களில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3 நபர்களுக்கு குறைவாக பாதிப்பு கண்ட 1,675 தெருக்களும், 3 முதல் 4 பேர் வரை பாதிப்பு கண்ட 15 தெருக்களும், 5-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட 32 தெருக்களும் கணக்கெடுக்கப்பட்டு முதற்கட்டமாக 3 முதல் 5-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ள 47 தெருக்களில் தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது.
3 நோயாளிகளுக்கு கீழுள்ள 1,675 தெருக்களுக்கு தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. தொற்று கண்டறியப்பட்ட 1,722 தெருக்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்குத் தேவையான காய்கறி, மளிகை, பால் மற்றும் மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுக்க அந்தந்த தெருக்களில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொருட்கள் தேவைப்படுவோர் இந்தக் குழுவை அணுகி தெரிவித்தால் அவர்களுக்கு அவர்கள் வாங்கிக் கொடுப்பார்கள். இந்த பொருட்கள் வாங்கி கொடுக்கும் நபர்கள், அதற்கான பாதுகாப்பு கவச ஆடைகள் அணிந்து இருப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT