Published : 06 Jul 2020 06:03 PM
Last Updated : 06 Jul 2020 06:03 PM
பெரும்பாலான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை வழங்கப்படாமல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகிற அவலம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூலை 6) வெளியிட்ட அறிக்கை:
"சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல் நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த சில நாட்களில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் கோயம்புத்தூருக்கு அருகில் 15 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு மாணவியை அவருடன் படித்த 4 மாணவர்கள் உட்பட 10 பேர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். கட்டிடத் தொழிலாளியின் மகளான இவர், இத்தகைய கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
இத்தகைய கொடூர வன்கொடுமை சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது. ஆனால், பெரும்பாலான வழக்குகளில் தண்டனை வழங்கப்படாமல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகிற அவலமும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துகிற வகையில் இதுகுறித்த சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வந்து குற்றவாளிகளைத் தண்டிக்கிற சூழலை உருவாக்க வேண்டும்.
எனவே, ஆவுடையார் கோவில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலைக்கு ஆளான குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்கியிருக்கிறது. இத்தகைய இழப்பீடுகளின் மூலம் குற்றங்களைக் குறைத்துவிட முடியாது. இழப்பீடு வழங்கிவிட்டு தமது பணி முடிந்துவிட்டதாக தமிழக அரசு அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையான தண்டனைகளைப் பெற்றுத் தருவதன் மூலமே தமிழகத்தில் பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும்"
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT