Published : 06 Jul 2020 05:06 PM
Last Updated : 06 Jul 2020 05:06 PM
தஞ்சாவூரில் ராஜராஜசோழனால், வெட்டப்பட்ட, அழகி குளத்துக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களின் முயற்சியால் ஆற்றிலிருந்து தண்ணீர் வந்தது.
தஞ்சாவூரை ஆண்ட மன்னர்களில் ராஜராஜசோழன் நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தார். அவர் தஞ்சாவூர் நகரின் நீர்த்தேவைக்காக 50-க்கும் மேற்பட்ட குளங்களை வெட்டினார். இதில் அழகி குளமும் ஒன்று.
இந்தக் குளம் காலப்போக்கில் கருவேலமரங்கள் வளர்ந்தும், புதர் மண்டியும், குப்பை மேடாக காட்சி அளித்தது. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் குளத்துக்கு ஆரம்பத்தில் சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து தண்ணீர் வந்தது. நாளடைவில் இந்த நீர் வழிப்பாதை அடைபட்டுவிட்டது.
பின்னர், கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து ராணி வாய்க்கால் மூலம் குளத்துக்குத் தண்ணீர் வந்துள்ளது. ஆனால், நாளடைவில் ராணி வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால், கடந்த 50 ஆண்டு காலமாக இந்தக் குளத்துக்கு கல்லணைக் கால்வாயில் இருந்து தண்ணீர் வரத்தும் நின்றுவிட்டது.
இந்நிலையில், அழகி குளத்தைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாம்பாட்டித் தெரு, கவாஸ்காரத் தெரு மக்கள் இணைந்து துார்வாரி சுத்தம் செய்தனர். மேலும், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் குளத்தைச் சுற்றிப் பாதை அமைத்தும், பொதுமக்கள் அமர்வதற்காக இருக்கைகளும், குளத்தைச் சுற்றி மரக்கன்றுகளும் வைத்தனர்.
கடந்த ஆண்டு இந்தக் குளத்தில் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினர். தற்போது இந்தப் பகுதி பொதுமக்கள் கல்லணைக் கால்வாயில் இருந்து காவிரி நீரைக் கொண்டு வர முடிவு செய்து, 1,400 அடி நீளத்துக்குக் குழாய்களைப் புதைத்து, குளத்துக்குத் தண்ணீர் வர ஏற்பாடு செய்தனர்.
இதனால், குளத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து குளத்துக்குத் தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் மூலம் கவாஸ்கார தெரு, பாம்பாட்டித் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டும் வெகுவாக உயரும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT