Published : 06 Jul 2020 03:32 PM
Last Updated : 06 Jul 2020 03:32 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.
வெளிநாடு, மற்றும் சென்னை உட்பட வெளியிடங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினமும் களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிகள் வழியாக வந்த வண்ணம் உள்ளனர்.
இதில் அதிகமானோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் நகரப் பகுதிகள் மட்டுமின்றி கிராமங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ளது.
இதுனால் சமூகப்பரவல் ஏற்பட்டு விட்டதோ? என்ற அச்சம் மாவட்ட நிர்வாகத்தினர், மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
ஏற்கெனவே 652 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கத்தை விட அதிகமானோருக்கு பரிசோதனை செய்தபோது தொற்று அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 24 மணி நேரத்தில் 107 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் அரசு, மற்றும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர்களும், அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர், பயிற்சி மருத்துவர், செவிலியர் பயிற்சி மாணவியரும் அடங்குவர்.
தக்கலை பகுதியில் முளகுமூடு பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 18 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரல்வாய்மொழி பேரூராட்சி ஊழியர், அவரது மகன், குடும்ப உறுப்பினர் என 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுளளது. வடசேரி, மற்றும் ஒழுகினசேரி அப்டா சந்தை வியாபாரிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேரும் கரோனாவால் பாதிக்
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டாறில் கடையில் மளிகை பொருட்கள் வாங்கியவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மேற்கு மாவட்டமான மார்த்தாண்டம், மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் 2 பேர், மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 759 பேராக உயர்ந்துள்ளது. ஆசாரிபளளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதே நிலை சென்றால் குமரியில் தினமும் 200 பேருக்கு மேல் கரோனா தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. இதைத்தொடர்ந்து கரோனா தொற்றை மாவட்டம் முழுவதும் கண்டறியும் வகையில் வீடு வீடாக சளி, காய்ச்சல் இருப்பவர்கள் குறித்து ஆய்வுடன் கூடிய பரிசோதனை இன்று முதல் தொடங்கியது. முதற்கட்டமாக நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை பகுதியில் நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT