Published : 06 Jul 2020 03:42 PM
Last Updated : 06 Jul 2020 03:42 PM

பாடத்தொகுப்பு ரத்து அறிவிப்பு: அவசர கதியில் அறிவித்து வாபஸ் வாங்குவதே வாடிக்கை ஆகிவிட்டது: ஸ்டாலின் விமர்சனம்

பாடத்தொகுப்பு மாற்றம் குறித்து தமிழக அரசின் அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். அவசரப்பட்டு அறிவிப்பது, பின்னர் வாபஸ் பெறுவதே வழக்கமாகிவிட்டது என அவர் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு கடந்த ஆண்டு பாடத்திட்டங்கள் குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ‘பிளஸ் 1 பாடப்பிரிவில் செய்துள்ள புதிய மாற்றத்தில் பாடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர் கல்விக்கான வாய்ப்புகளும் சுருங்கும் நிலை ஏற்பட்டது.

புதிய அறிவிப்பின்படி, பிரிவு- 3 (கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்) மற்றும் பிரிவு 4- ல் (வேதியியல், உயிரியல், மனையியல்) சேரும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கோ அல்லது பொறியியல் படிப்புக்கோ விண்ணப்பம் செய்ய இயலாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.

உதாரணமாக பிளஸ் 1 வகுப்பில் கணிதம் தவிர்த்து, இதர பாடங்களைத் தேர்வு செய்து படிக்கும் மாணவருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காவிட்டால் அவர் பொறியியல் படிப்புகளில் சேரமுடியாத நிலை ஏற்பட்டது.

இதேநிலை தான் இதர பாடப்பிரிவுகளுக்கும் உருவாகும் என கல்வியாளர்கள் விமர்சித்தனர். பிளஸ் 1 புதிய பாடத் தொகுப்பு குறித்து மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துவதிலும் தமிழகம் தனித்தன்மையைக் கையாண்டது. உயா் கல்வியில் பல்வேறு துறைகளை மாணவா்கள் தோ்ந்தெடுக்கும் வாய்ப்புகளைத் தரும் வகையில் மேல்நிலைப் பள்ளியின் பகுதி 3-இல் நான்கு பாடங்கள் தரப்பட்டன.

உயா்கல்வி சோ்க்கைக்கான இடங்கள் சில பாடப்பிரிவுகளில் மிகக் குறைவாக உள்ளதால் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் பாடப்பிரிவை எடுக்கும் மாணவர், பட்டப்படிப்பில் புள்ளியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், உயிா் வேதியியல், உள்ளிட்ட பல துறைகளில் உள்ள வாய்ப்பைப் பயன்படுத்திச் சேர முடிந்தது.

மேல்நிலை வகுப்பில் பகுதி மூன்றில், நான்கு பாடங்கள் எடுத்து படித்த மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிக் கல்வி முடிந்த பின் மருத்துவம் அல்லது மருத்துவம் சார்ந்த பாடம் எடுக்க விரும்பி அதற்கான வாய்ப்பு கிடைக்காதவா்கள் பொறியியல் சாா்ந்த பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தது.

அரசு மாற்றிய பாடத்திட்டதால் இந்த வாய்ப்பு மூன்று பாடம் எடுத்துப் படிப்பவருக்கு இல்லாமல் போனது. இதைக் கருத்தில் கொண்டு இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற்று நான்கு பாடங்கள் கொண்ட பழைய மேல்நிலைப் பள்ளிக் கல்வி முறை தொடரச் செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் 11-ம் வகுப்புப் பாடப் பிரிவுகளின் தேர்வுக்கு இனி பழைய நடைமுறையே தொடரும் எனவும் புதிய பாடத்தொகுப்பு முறை ரத்து செய்யப்படுவதாகவும் பள்ளிக் கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

புதிய அரசாணையின்படி, ஆறு பாடங்கள் என்ற பழைய நடைமுறையே தொடரும் எனவும், பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பிட்ட பழைய அரசாணை ரத்து செய்யப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில், ''குளறுபடியான புதிய பாடத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என நான் கோரி இருந்தேன். இப்போதாவது அதனை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன்.

முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டுப் பின்னர் திரும்பப் பெறுவது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் இத்தனை அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி’ '' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x