Published : 06 Jul 2020 04:11 PM
Last Updated : 06 Jul 2020 04:11 PM
மதுரை - தேனி சாலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எதிரே உள்ளது கிண்ணிமங்களம் கிராமம். இந்த ஊரில் உள்ள ஏகநாதர் பள்ளிப்படை கோயிலும், அதையொட்டிய மடமும் (பள்ளிப்படை கோயில் என்பது மன்னர்கள், அல்லது பெரும் வீரர்கள் நினைவாக அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் கோயில்) மிகப் பழமையானது. கடந்தாண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அந்தக் கோயில் அருகே நிலத்தைத் தோண்டியபோது பழங்காலப் பொருட்கள் கிடைத்தன.
அவற்றை ஆய்வு செய்து வந்த கல்வெட்டு ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர், அங்குள்ள தூண்களில் தமிழ்ப் பிராமி (தமிழி) எழுத்துக்கள் இருப்பதை இரு நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்தனர். இதுகுறித்து காந்திராஜன் கூறியபோது, "அந்த கல்தூணில் 'ஏகன் ஆதன் கோட்டம்' என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டு கி.மு. 6-ம் நூற்றாண்டிற்கும் கி.மு. 2-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதுகிறோம்.
பொதுவாக, பாண்டிய நாட்டில் உள்ள குன்றுகளில் பல தமிழி கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டு இருந்தாலும், தூண் ஒன்றில் தமிழி எழுத்துக்கள் தமிழ்நாட்டில் முதன்முறையாக இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் ஓரடி உயரமுள்ள மற்றொரு சதுரக்கல்லில், 'இறையிலியாக ஏகநாதர் பள்ளிப்படை மண்டளி ஈந்தார்' என்று வட்டெழுத்தில் எழுதப்பட்ட ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இது 8 அல்லது 9-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.
ஏற்கெனவே, மதுரை கீழடியிலும், அதையொட்டியுள்ள அகரம் கிராமத்திலும் தொடர்ச்சியாகத் தொல் பொருட்கள் கிடைத்துவரும் நிலையில், இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்துப் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையப் புரவலரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு கூறுகையில், "ஆதன் எனும் பெயர் சங்க காலத்தில் பெரிதும் வழக்கில் இருந்துள்ளது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் நிறைய உள்ளன. கீழடியில் பானை ஓடு ஒன்றில் அப்பெயர் பொறிக்கப்பட்டிருந்ததும் அகழாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பெயர் இப்போது தூண் கல்வெட்டில் கிடைத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.
இந்த கல்வெட்டுக்களைக் கண்டறிந்து வெளிப்படுத்திய நண்பர் காந்திராஜன் மற்றும் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பகுதியில் தமிழகத் தொல்லியல் துறை முறையான, முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு மேலும் பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இதேபோல, சு.வெங்கடேசன் எம்.பி.யும் கிண்ணிமங்களத்தில் முறையாக ஆய்வு செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார். கூடவே, தனது முதல் நாவலின் தலைப்பில் 'கோட்டம்' என்ற சொல் இடம்பெற்றுள்ளதையும், இரண்டாம் நாவலான 'வேள்பாரி'யில் வரும் முதல் கதாபாத்திரத்தின் பெயர் 'ஆதன்' என்பதையும் சுட்டிக்காட்டி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் வெங்கடேசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT