Published : 06 Jul 2020 11:00 AM
Last Updated : 06 Jul 2020 11:00 AM
ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என, மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூலை 6), மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் 1
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய தமிழக அரசு, இக்கொடூரப் படுகொலையை மூடி மறைத்திட முனைந்து நின்ற நேரத்தில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தக்க நேரத்தில் தலையிட்டு, நீதியை நிலைநாட்ட உறுதியுடன் உத்தரவுகளைப் பிறப்பித்தது. மக்கள் மனதில் நீதித்துறை மீதான நம்பிக்கையை துளிர்விடச் செய்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலில் ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலைக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. நீதிமன்றத்தின் துரித நடவடிக்கைகளுக்கு மதிமுக வரவேற்பு தெரிவிப்பதுடன், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு பாராட்டுகளை உரித்தாக்குகிறது.
தீர்மானம் 2
உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் 'லாக்-அப்' படுகொலை வழக்கை விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் மற்றும் சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகளுக்கு இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன், ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும்.
தீர்மானம் 3
சென்னையைப் போலவே மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் பல மாவட்டங்களில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், கரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கரோனா தொற்றுப் பரிசோதனைக்கான பி.சி.ஆர். கருவிகள் தமிழக அரசின் அறிவிப்பின்படி, தற்போது கையிருப்பில் உள்ள 5 லட்சம் கருவிகள் போதுமானவை அல்ல. தொற்றைப் பரவலாகக் கட்டுப்படுத்த தமிழக அரசு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4
ரயிலவே துறை தனியார்மயமானால், ரயில்வே பயணக் கட்டணங்கள் தனியார் நிறுவனங்களின் விருப்பப்படி தாறுமாறாக பல மடங்கு உயரும். ரயில் பயணிகள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உருவாகும். சேவைத் துறை என்பது மாற்றப்பட்டு, ரயில்வே வர்த்தகத் துறையாக மாறினால், மக்களுக்கு பெரும் சுமையாக ஆகிவிடும். எனவே ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களைப் புகுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தீர்மானம் 5
விளைநிலங்களைப் பாழ்படுத்தும் ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT