Published : 05 Jul 2020 02:29 PM
Last Updated : 05 Jul 2020 02:29 PM
புதுச்சேரியிலும் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 5) கூறும்போது, "இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று காலை ஆய்வு செய்தேன். கரோனா பரிசோதனையை ஒரு மணி நேரத்துக்குள் முடிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளேன். நாளை கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களைப் பல் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
நான் அங்கிருந்து வரும்போது கதிர்காமம் சாலையில் திருவிழா நடப்பது போல் கூட்டமாக இருந்தது. மத்திய அரசு தளர்வு அளித்தாலும் கூட ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவது நல்லது. ஏனென்றால், ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படுகிறது. அவர்கள் சனிக்கிழமையே பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
ஊரடங்கை அமல்படுத்தினால் வருவாய் இருக்காது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட முடியாது. பொதுமக்களுக்கான நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாது என மத்திய அரசு தளர்வுகளை அளிக்கிறது. இருப்பினும், வாரத்தில் ஒரு நாள் என ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது நல்லது. இது தொடர்பாக முதல்வர், அமைச்சர்களிடம் பேசி முடிவு செய்யப்படும். இதன் மூலம் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர வாய்ப்பு ஏற்படும்.
தூய்மைப் பணியில் ஏனாம் முதலிடத்தில் இருந்தது. ஆனால், ஜூலை 1 ஆம் தேதி முதல் ஏனாமில் தூய்மைப் பணி நடைபெறவில்லை. தொண்டு நிறுவனம் மூலம் தூய்மைப் பணி மேற்கொண்ட ஊழியர்களுக்குக் கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான ஊதியத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிறுத்திவிட்டார். இதனால் அவர்களும் தூய்மைப் பணிகளை நிறுத்தியுள்ளனர்.
முதல்வர், அமைச்சர்கள் கோப்புகளை அனுப்பினால் கூட ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிப்பதில்லை. தூய்மைப் பணியை மேற்கொள்ளாததால் ஏனாமில் ஏதேனும் சுகாதாரப் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பு ஆளுநர் கிரண்பேடிதான் என்று ஏற்கெனவே நான் கூறியுள்ளேன். கடந்த 3 நாட்களாக பல கிராமங்களில் தூய்மைப் பணி நடைபெறவில்லை என்று புகார் வருகிறது. இது தொடர்பாக முதல்வரிடம் பேசினேன். இப்பிரச்சினை தலைமைச் செயலருக்கும், உள்ளாட்சித்துறைச் செயலருக்கும் தெரியும்.
புதுச்சேரியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் 'ஸ்வச்சதா கார்ப்பரேஷன்' ஊழியர்களுக்கான ஊதியத்தை ஒரு நாள் கூட காலதாமதம் செய்யாமல் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கிறார். ஆனால், ஏனாமில் 6 மாதம், 9 மாதம், 12 மாதத்துக்கு ஒரு முறைதான் ஊதியம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கிறார். இந்த விவகாரத்தில் ஏனாமை ஆளுநர் கிரண்பேடி பழிவாங்குகிறார்.
கரோனா பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் யாருக்கும் ஊதியப் பிரச்சினை வரக் கூடாது என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், ஆளுநர் கிரண்பேடி மட்டும் மீனவர்கள் மற்றும் ஏனாமை டார்க்கெட் வைத்து பிரச்சினையை ஏற்படுத்துகிறார். இது தொடர்பாக பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், உள்துறைச் செயலர் ஆகியோருக்கு இன்று கடிதம் அனுப்புகிறேன். ஏனாமில் நாளைக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கு ஆளுநர் தான் முழுப் பொறுப்பு".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT