Published : 24 Sep 2015 09:41 AM
Last Updated : 24 Sep 2015 09:41 AM
திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் கோயில்களில் பயன்பாடற்ற நிலையில் உள்ள பழமையான உலோக மணிகளைச் சீரமைத்து மீண்டும் ஒலிக்கச் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது திருச்சி பாரத மிகுமின் நிறுவன (பெல்) வெல்டிங் ஆராய்ச்சிக் கழகம்.
பழங்காலத்தில் இசைக் கருவி யாகவும், மக்களை ஒன்று திரட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்த உலோக மணிகள் கோயில்கள், தேவாலயங்களின் வழிபாட்டில் இன்றளவும் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
பெரும்பாலும் பித்தளை, வெண் கலம் மற்றும் இரும்பு போன்ற உலோகக் கலவைகளால் இந்த மணிகள் வார்த்தெடுக்கப்படுகின்றன. தொடர்ந்த பயன்பாடு மற்றும் உலோக வார்ப்பில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றால் மணிகளில் கீறல்கள் ஏற்பட்டு, அதன் ஒலிக்கும் திறன் குறைந்து விடுகிறது.
இந்த மணிகளை சீரமைக்கத் தேவையான தொழில்நுட்பங்கள் இல்லாத காரணத்தால் பல கோயில் கள், தேவாலயங்களில் பெரிய அளவிலான மணிகள் பயன்படுத்த இயலாமல் இருக்கின்றன.
பெல் நிறுவனத்தில் உள்ள வெல்டிங் ஆராய்ச்சிக் கழகத்தில், ஒலிக்கத் தகுதியற்ற பழமை யான கோயில் மணிகள் மறு சீரமைக்கப்படுகின்றன.
சிதையுறாச் சோதனை
இதுகுறித்து பெல் வெல்டிங் ஆராய்ச்சிக் கழக பொது மேலாளர் ஆர்.ஈஸ்வரன் ‘தி இந்து’விடம் கூறிய தாவது: பழமையான மணிகளை எங்களது வெல்டிங் ஆராய்ச்சிக் கழகத்துக்கு கொண்டு வந்து அதனை சிதையுறாச் சோதனைக்கு உட்படுத்தி, அதில் உள்ள கீறலின் முழுமையான அளவை அறிந்து கொள்வோம். அதன் பின்னர், மணி எந்த உலோகக் கலவையால் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்வோம்.
பின்னர், அதற்கு இணையான நிரப்பிக் கலவை கண்டறியப்படும். சீரமைக்க ஏதுவாக கீறல் விழுந்த பகுதி சற்று அகலமாக வெட்டி எடுக்கப்பட்டு, மணிக்கென தனியாக ஒரு பொருத்தி வடிவமைக்கப்படும்.
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட எரிஉலையில் மணியை மெதுவாக சூடேற்றி, வெல்டிங் செய்யும்போது சூடு குறையாமல் இருக்க எரிப்பான்கள் இடையிடையே வைக்கப்படும். பொதுவாக ஆக்ஸி- அசிட்டிலின் வாயு முறையிலான வெல்டிங் பயன்படுத்தப்படுகிறது.
சீரமைப்புக்குப் பின்னர் மெதுவாக குளிர்விக்கப்படும். மணியின் நாக்கும் சீரமைக்கப்பட்டு, அது மணியின் மீது மோதுமிடமும் மாற்றியமைக்கப்படும்” என்றார்.
வெல்டிங் ஆராய்ச்சிக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர் கந்தசாமி கூறியபோது, “வெல்டிங்கில் பயன்படுத்தப்படும் உலோகத்தின் குறைவான பாய்மத்தன்மை, அதிகமான சூட்டில் ஆவியாகும் துத்தநாகத்தின் தன்மை, இளக்கி பூசப் பயன்படுத்தப்படும் சரியான பற்றிணைப்புக் கம்பிகளின் தேர்வு, மறு சீரமைப்பின்போது தோன்றும் நுண்துளை தன்மை மற்றும் வார்ப் பில் ஏற்படும் குறைகள் ஆகிய சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொண்டுதான் இந்த சீரமைப் புப் பணி மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.
மணியோசையும் ஆனந்தக் கண்ணீரும்
ஆர்.ஈஸ்வரன் மேலும் கூறியபோது, “இதுவரை 40-க்கும் மேற்பட்ட பழமையான மணிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் 2 டன் எடையுள்ள திருச்சி மலைக்கோட்டை கோயில் மணிதான் சீரமைக்கப்பட்ட மணிகளில் அதிக எடை கொண்டதாகும். இந்த மணியை மலையிலிருந்து இறக்குவதில் சிரமம் இருந்ததால் அதே இடத்தில் சீரமைப்புப் பணி மேற்கொண்டோம்.
இதேபோன்று திருவாரூர் மாவட்டம், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் இருந்த மணி 70 ஆண்டுகளுக்கு மேலாக ஒலிக்காமல் இருந்தது. இதை சீரமைத்து வழங்கியபோது, பழைய மணியின் ஓசையைக் கேட்ட அப்பகுதி முதியவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீரைக் காண முடிந்தது” என்றார்.
ஆர்.ஈஸ்வரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT