Published : 04 Jul 2020 05:28 PM
Last Updated : 04 Jul 2020 05:28 PM

கரோனா நோயாளிகளுக்கு தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் கொடுங்கள்; வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் கோரிக்கை

வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்த திமுக எம்.பி., எம்எல்ஏக்கள்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தினமும் நான்கு லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நகர்ப்புறங்களில் மட்டுமில்லாமல் கிராமப்புறங்களிலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்ய முடியாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் தலைமையில் வேலூர் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், வேலூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தை இன்று (ஜூலை 4) சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஏ.பி.நந்தகுமார் கூறும்போது, "சென்னைக்கு அடுத்தபடியாக வேலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வெளியூர்களில் இருந்து வருபவர்களையும் பாதுகாத்து முறையாகத் தங்கவைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறி வருகிறார். வேலூர் சிஎம்சி மருத்துமவனையில் தினமும் ஒவ்வொரு கரோனா நோயாளிக்கும் 4-5 லிட்டர் தண்ணீர் கொடுக்கின்றனர். கரோனா நோயாளிகளுக்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் கூட முறையாகக் கொடுக்க மறுக்கின்றனர். இதுகுறித்து புகார் வரப்பெற்றதும் நாங்கள் 1,000 பாட்டில் தண்ணீரை அனுப்பி வைத்தோம். வேலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அனைத்து கரோனா நோயாளிகளுக்கும் தினமும் 4 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தினோம். அதைச் செய்துகொடுப்பதாக அவரும் உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x