Published : 04 Jul 2020 03:54 PM
Last Updated : 04 Jul 2020 03:54 PM

மேற்கு மாவட்டங்களில் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டம்: கரோனா நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா? - முத்தரசன் கண்டனம்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

மேற்கு மாவட்டங்களில் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூலை 4) வெளியிட்ட அறிக்கை:

"மேற்கு மாவட்டங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, எரிவாயு குழாய் பாதை போடுவது, எண்ணெய் குழாய்கள் பாதை போடுவது போன்ற திட்டங்களால் விவசாயிகளின் சாகுபடி நிலங்கள் பெருமளவு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து விடுவார்கள். இந்தப் பகுதியில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்து, புலம் பெயர்ந்து செல்லும் நிர்பந்தம் ஏற்படும் என்பதை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அருகில் உள்ள தேவனகொந்தி வரை அமைக்கப்படும் எண்ணெய்க் குழாய் பாதையை சாகுபடி நிலங்களை பாதிக்காமல் மாற்றுவழியில் அமைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றுபட்டு வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக, விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் உதவியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அணுகியுள்ளனர். முதல்வர் வழிகாட்டல்படி, மாநில தொழில்துறை அமைச்சரைச் சந்தித்த கூட்டமைப்பு பிரதிநிதிகள் விவசாயிகளுக்கும், சாகுபடி நிலங்களுக்கும் ஏற்படும் பேரழிவுகளை எடுத்துக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவியோடு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரின் கவனத்திற்கு பிரச்சினையின் தீவிரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் நல்ல பதிலை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்துடன் கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் அமலாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இருகூர் - தேவனகொந்தி குழாய் பதிப்பு திட்ட அதிகாரிகள் விவசாயிகளுக்கு நிலம் எடுப்பு தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு அறிக்கை கொடுத்து வருகின்றனர்.

பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில், கரோனா நோய் பரவல் அதிகரித்து வரும் ஆபத்தான நிலையில் விவசாயிகளை விசாரணைக்கு அழைத்திருப்பது வஞ்சகத் திட்டமாகும்.

மேற்கு மாவட்டங்களில் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டம் குறித்து விவசாயிகள் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் அரசு பேசித் தீர்வு காணும் வரையில் எண்ணெய்க் குழாய் பதிப்பு திட்ட அதிகாரிகளின் விசாரணை உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தலையிட்டு நிறுத்தி வைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது"

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x