Published : 04 Jul 2020 03:31 PM
Last Updated : 04 Jul 2020 03:31 PM
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாகக் காவல் உயர் அதிகாரிகளையும், காயமடைந்தவர்களையும் நேரில் பார்க்காமலேயே சிறையில் அடைக்க உதவிய மாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வலியுறுத்தி இருக்கிறது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 19.6.2020 அன்று நடந்த இரட்டைக்கொலை தொடர்பாக 4 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் போக்கைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தமிழ்நாடு என்ற பெயரில் அமைப்பொன்றைத் தொடங்கியுள்ளன. அந்த அமைப்பின் சார்பில் தலைவர் தியாகு, செயலாளர் மீ.த.பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக தமிழக அளவில் வணிகர்களும் பொதுமக்களும் கிளர்ந்தெழுந்து போராடியதாலும், அரசியல் கட்சிகள், மனிதவுரிமை அமைப்புகள் தொடர்ந்து எடுத்த முயற்சிகளாலும், முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்பட பலதரப்பட்ட குடிமக்களும் ஓங்கிக் குரல் கொடுத்தமையாலும், ஊடகங்கள் ஏற்றிய வெளிச்சத்தாலும், அனைத்திந்திய அளவிலும் அனைத்துலக அளவிலும் கூட நீதிக்கான குரல் எதிரொலித்தமையாலும் சாத்தான்குளம் நீதிக்கான போராட்டப் பயணத்தில் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளோம்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை எடுத்த முடிவுகளையும், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நடத்திய முதற்கட்ட விசாரணையையும், சி.பி.சி.ஐ.டி. புலனாய்வுக் குழுவினரின் விரைவான நடவடிக்கைகளையும் வரவேற்கிறோம். இந்த முயற்சிகளில் சற்றும் தளர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு நம் அனைவர்க்கும் உண்டு. அதற்காகவே இந்தக் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் - தமிழ்நாடு சார்பாகக் கோரிக்கையாக முன்வைக்கிறோம்.
1. சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்துக் காவலர்கள் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
2. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜூன் 19-ம் தேதி இரவு ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சித்திரவதை செய்ததில் காவலர்களுடன் சேர்ந்து ஈடுபட்ட காவல்துறையின் நண்பர்கள் என்று கூறிக்கொண்டோரையும் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
3. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் நேரில் பார்க்காமலே நீதித்துறைக் காவலுக்கு அனுப்பிய சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் டி.சரவணன், அவர்களது உடல்நிலை குறித்துத் தவறான சான்று வழங்கிய சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா, அவர்களை எவ்வித ஆய்வுமின்றி சிறையில் சேர்த்துக் கொண்ட கோவில்பட்டி சிறைக் கண்காணிப்பாளர் ஆகிய கடமை தவறிய அதிகாரிகள் மனிதவுரிமைகளுக்கும் மனித உயிருக்கும் ஏற்படுத்திய ஆபத்தைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
4. கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணைக்குச் சாத்தான்கும் சென்றபோது அங்கு ஒத்துழைப்புத் தர மறுத்த தூத்துக்குடி கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.குமார், துணைக் கண்காணிப்பாளர் சி.பிரதாபன் ஆகியோரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து அரசு அவர்கள் மீது இ.த.ச. பிரிவு 353-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. விசாரணைக்குச் சென்ற கோவில்பட்டி நீதித்துறை நடுவரை மிகவும் தரக்குறைவாகப் பேசிய காவலர் மகாராஜன் மீது இ.த.ச. பிரிவு 353-ன் கீழ் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்.
6. கடந்த காலத்தில் சாத்தான்கும் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்ற காவல் சித்திரவதைகள் குறித்த முறையீடுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த இரட்டைப் படுகொலைக்குத் துணைபோன தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், இ.கா.ப., உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.
7. இவ்வழக்கில் நேர்மையாகவும் உண்மையாகவும் சாட்சியமளித்துள்ள தலைமைக் காவலர் ரேவதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரது நேர்மையான சேவையை அரசு அங்கீகரித்துப் பாராட்ட வேண்டும்.
8. சி.பி.சி.ஐ.டி. புலனாய்வுக் குழுவினர் இந்த இரட்டைப் படுகொலை வழக்கில் முறையான, முழுமையான, பாகுபாடற்ற, புலனாய்வைக் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
9. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இதுவரை தொடர்ச்சியாக நடைபெற்றிருக்கும் காவல் சித்திரவதைகள், காவல் படுகொலைகள் - ராஜாசிங் என்பவர் மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதல், மகேந்திரன் என்பவர் அடிந்துக் கொலை செய்யப்பட்ட கொலை வழக்கு, லாசர் பர்னபாஸ் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகள் மற்றும் மாற்றுத்திறனாளியான அப்பாத்துரை மீது நிகழ்த்தப்பட்ட கொடும் தாக்குதல் போன்ற அனைத்துக் குற்றங்களும் முழுமையாக விசாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர்கள் முத்துராஜ் முருகன் ஆகியோர் மீது சம்பந்தப்பட்ட குற்றவியல் சட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. தமிழக அரசு சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பக் கூடாது. இப்போது நடைபெறும் சி.பி.சி.ஐ.டி. விசாரணையே தொடர வேண்டும். அது சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பும் வழங்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு இதற்கு முன்னர் அனுப்பப்பட்ட ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு, ஐ.ஐ.டி. மாணவர் பாத்திமா வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு போன்ற வழக்குகள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே கிடப்பில் கிடப்பதைக் கணக்கில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ-.யிடம் ஒப்படைக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.
11. சாத்தான்குளம் காவல் சித்திரவதை, இரட்டைக் கொலை போன்ற கொடுமைகள் மீண்டும் நிகழாமலிருக்கக் காவல் துறை அதிகாரிகளின் இடமாற்றம் என்பதற்கு மேல் தமிழக அரசு என்ன உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கவிருக்கிறது என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். இது குறித்துப் பொது விவாதம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கனியமுதன், பேராசிரியர் தீபக்நாதன், தடயவியல் நிபுணர் மருத்துவர் சேவியர் செல்வசுரேஷ், வழக்கறிஞர்கள் அஜீதா, ம.பிரிட்டோ, மக்கள் கண்காணிப்பகம் ஆசீர் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT