Published : 04 Jul 2020 02:58 PM
Last Updated : 04 Jul 2020 02:58 PM
காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வீசி இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா இன்று மிகவும் எளிமையாக கோயில் பிரகாரத்தின் உள்ளேயே நடைபெற்றது.
அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டவரும், தேவாரத்திற்கு முன்பு திருவந்தாதி படைத்த பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது
அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்குட்பட்ட அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் விமரிசையான வகையில் நடத்தப்படும் இவ்விழா நிகழாண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக காரைக்கால் கைலாசநாதர் கோயில் வளாகத்துக்குள்ளேயே மிகவும் எளிமையான முறையில் பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 1-ம் தேதி மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு வைபவத்துடன் விழா தொடங்கியது. 2-ம் தேதி காலை கைலாசநாதர் கோயிலில் புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம், மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு நடைபெற்றது. நேற்று (ஜூலை 3) மாலை பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மாங்கனித் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா இன்று (ஜூலை 4) காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.
இதனையொட்டி காலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து, மகா தீபாராதனைக் காட்டப்பட்டு பிச்சாண்டவர் வீதியுலா மங்கள வாத்தியங்கள் முழங்க கோயில் பிரகாரத்துக்குள்ளேயே நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்றோர் மாங்கனிகளை இறைவனுக்குப் படைத்தனர். மாங்கனிகளை வீசியெறிந்து பக்தர்கள் எடுத்துச் செல்லும் நிகழ்வு சம்பிரதாய முறையில் நடத்தப்பட்டது.
பிரகார உலாவின் நிறைவில் பிச்சாண்டவரை புனிதவதி அம்மையார் எதிர்கொண்டு அழைத்துச் சென்று மாங்கனியுடன் தயிர்சாதம் வைத்து அமுது படையல் செய்யும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில்கள்) எம்.ஆதர்ஷ், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், தேவஸ்தான அறங்காவல் வாரிய நிர்வாகிகள், சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.
இன்று இரவு பரமதத்தர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வும், நாளை (ஜூன் 5) அதிகாலை அம்மையாருக்கு சிவபெருமான் காட்சி தரும் நிகழ்வும் நடைபெறுகிறது.
வழக்கமாக காரைக்கால் நகரப் பகுதியில் கைலாசநாதர் கோயில் வீதி, பாரதியார் சாலை, மாதா கோயில் வீதி, லெமர் வீதி வழியாக மாலை வரை பவளக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் வீதியுலா நடைபெறும். இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து மிக நீண்ட வரிசையில் நின்று இறைவனுக்கு மாங்கனிகளைப் படைத்துச் செல்வர். வீதியுலாவின்போது பவளக்கால் சப்பரம் ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்த பின்னர் பின்னாலிருக்கும் சாலை, வீடுகள், கடைகள், மாடிப் பகுதிகளில் கூடியிருக்கும் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக மாங்கனிகளை வீசி இறைத்து இறைவனை வழிபடுவது வழக்கம். அந்த மாங்கனிகளை இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதமாகக் கருதி பக்திப் பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் அவற்றை எடுத்துத் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு செல்வார்கள்.
இதனால் திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை போன்ற பல இன்னல்கள் நீங்கி தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நிகழாண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி, எளிய வகையில் கோயிலுக்குள்ளேயே விழா நிகழ்வுகள் நடைபெற்றதால் அத்தகைய காட்சிகளைக் காண முடியவில்லை.
விழா நிகழ்வுகள் அனைத்தும் கோயில் இணையதளம், யூ டியூப், உள்ளூர் தொலைக்காட்சி மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிலையில் பக்தர்கள் அதனைக் கண்டு ரசித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment