Published : 04 Jul 2020 12:05 PM
Last Updated : 04 Jul 2020 12:05 PM
தேசப் பாதுகாப்புப் பணியில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு வரும் பிரதமரின் முயற்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 4) வெளியிட்ட அறிக்கை:
"இந்திய - சீன எல்லைப் பகுதியில் மோதல் சூழல் நிலவுகிற நிலையில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்நிலையில், பிரதமர் மோடி முப்படைத் தளபதிகளையும் அழைத்துக் கொண்டு அப்பகுதிகளுக்குச் சென்றுள்ளார். படை வீரர்களைச் சந்தித்து அவர்களது தீர தியாக உணர்வுகளைப் பாராட்டியுள்ளார். இச்செயல் ராணுவ வீரர்களுக்கு புதிய உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அங்கே மருத்துவமனையில் மருத்துவ சிசிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். 'உங்களின் தியாக உணர்வை ஓட்டுமொத்த தேசமே உணர்ந்துள்ளது. உங்களின் நலனையும் உங்கள் குடும்ப நலனையும் தேசம் பாதுகாக்கும்' எனப் பேசியுள்ளார். இது தாக்குதலுக்கு உள்ளான படைவீரர்களின் மனதுக்கு மருந்தாகவும் மேலும் கூடுதல் நம்பிக்கையும் கொடுத்துள்ளது.
'அமைதியை நாடும் தேசம் இந்தியா. ஆனால், அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டால் தக்க பதிலடியும் தருவோம்' என்ற உறுதியான நிலைப்பாட்டை உலகுக்கு எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தேசத்தின் வலிமையை வெளிப்படுத்தும் வரவேற்புக்குரிய செயல். அதோடு இமயத்தின் உச்சியில் நின்று கொண்டு வீரம், மானம், நல்ல திட்டமிடல், நம்பிக்கை என்ற நான்கு பண்புகளை படையின் திறன்கள் என்ற பொருள் அடங்கிய
'மறம்மானம் மான்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு'
என்ற திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசியுள்ளார். இதன் மூலம் இமயத்தில் நின்று கொண்டு தமிழின் பெருமையையும் திருவள்ளுவர் காட்டும் படைமாட்சியை உலகுக்கு உணர்த்தியுள்ளார். இது தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள படை வீரர்களுக்கு உற்சாகமூட்டுவது, பாதிப்புக்கு உள்ளான வீரர்களுக்கு பாதுகாப்பு உணர்வை உறுதிமொழியைத் தருவது, தேசத்தின் உறுதிப்பாட்டை உலகுக்கு உணர்த்துவது, தமிழின் பெருமையையும் படைச் சிறப்பின் மாண்பையும் மலை உச்சியிலும் மறக்காமல் பறைசாற்றுவது என்ற நான்கு நல்ல செய்திகளை சமிக்ஞைகளை உலகுக்கு அளித்த பிரதமருக்கு வாழ்த்துகள். தேசப் பாதுகாப்பு பணியில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு வரும் பிரதமரின் முயற்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT