Published : 04 Jul 2020 07:16 AM
Last Updated : 04 Jul 2020 07:16 AM

வேலூர் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை முடிவு தெரிய 9 நாட்கள் ஆவதாக மக்கள் புகார்: இனி 2 நாட்களில் முடிவு தெரியும் என ஆட்சியர் உறுதி

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கரோனாபரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இனி 48 மணி நேரத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உறுதியளித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 145 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,742 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 546 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.

இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் முடிவுகள் வெளியாகும் நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 முதல் 9 நாட்கள் வரை ஆவதாக புகார் எழுந்துள்ளது. நேற்று வெளியான பட்டியலில் இடம் பெற்றிருந்த பலர் ஜூன் 25-ம் தேதி பரிசோதனைக்கான மாதிரியை வழங்கியிருப்பது தெரியவந்தது.

வேலூரில் அதிக பரிசோதனை

இதுகுறித்து வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் அதிக பரிசோதனை நடைபெறும் மாவட்டமாக வேலூர் உள்ளது. ஜூலை 2-ம் தேதி நிலவரப்படி 29,954 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் 600-700 பேருக்கு பரிசோதனை செய்கிறோம். இனி அதிகபட்சமாக 48 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படும். பரிசோதனைக்காக மாதிரிகளை கொடுத்தவர்கள் முடிவு வரும் வரை வெளியில் நடமாடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x