Published : 03 Jul 2020 10:11 PM
Last Updated : 03 Jul 2020 10:11 PM

தமிழகத்தில் அனைத்து பட்டப்படிப்பு இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கரோனா தொற்று தனிமைப்படுத்துதல் பிரிவுகளாக கல்லூரிகள் மாற்றப்பட்டுள்ளதால் வகுப்புகள் நடக்க வாய்ப்பில்லாததால் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புக்கள் உள்ளிட்ட அனைத்து பட்டப் படிப்புக்களுக்கான இறுதிப்பருவத் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புக்கள் உள்ளிட்ட அனைத்து பட்டப் படிப்புக்களுக்கான இறுதிப்பருவத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், “ பள்ளி, கல்லூரிகள் கரோனா தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளதால், இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

தற்போதைய சூழலில் கரோனா பாதிப்பு செப்டம்பர் மாதம் தான் தணியும் எனவும், பள்ளி, கல்லூரிகள் 2021-ம் ஆண்டு ஜனவரி தான் திறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், ஜனவரியில் தேர்வு எழுதினால் அதன் முடிவுகள் வெளியாக மார்ச் மாதமாகி விடும் என்பதால், இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதாலும் தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்பதாலும், இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்து, ஹால் டிக்கெட் பெற்ற அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும். இறுதி பருவத் தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும்”. என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x