Published : 03 Jul 2020 07:30 PM
Last Updated : 03 Jul 2020 07:30 PM

மதுரையில் கரோனா பரிசோதனை முடிவை அறிவிக்க 4 நாட்கள் ஆவதால் மன அழுத்தத்தில் நோயாளிகள் தவிப்பு 

மதுரை

மதுரையில் ‘கரோனா’ பரிசோதனை முடிவுகளைத் தெரிவிப்பதற்கு 4 நாட்கள் வரை நீண்ட தாமதம் ஏற்படுவதால் அதுவரை பாசிட்டிவா? நெகட்டிவா? என்று தெரியாமல் பரிசோதனை செய்தோர் மனக் குழுப்பம், மன அழுத்தத்துடன் வீட்டிலேயே தவிக்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் ‘கரோனா’ தொற்று வேகமாகப் பரவிவருகிறது. ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த இந்தத் தொற்று தற்போது மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கும் பரவியது.

கடந்த 30-ம் தேதி வரை மாநகராட்சியில் மட்டும் 1285 பேருக்கு ‘கரோனா’ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 19-வது வார்டு பொன்மேனி, 5-வது வார்டு பிபிகுளம், 3-வது வார்டு ஆணையூர், 17-வது வார்டு எல்லீஸ் நகர், 22-வது வார்டு கோச்சடை, 25-வது வார்டு கன்னநேந்தல், 28-வது வார்டு உத்தங்குடி, 35-வது வார்டு மதிச்சியம், 42-வது வார்டு சொக்கிகுளம், 44-வது வார்டு கே.கே.நகர், 47-வது வார்டு ரிசர்வ் லைன், 53-வது வார்டு பங்கஜம் காலனி, 81-வது வார்டு தமிழ்சங்கம்,

சின்ன அனுப்பானடி, 77வது வார்டு சுந்தர்ராஜபுரம், 85-வது வார்டு ஜடமுனி கோவில், 75-வது வார்டு மாடக்குளம், 93-வது வார்டு கோவிலன் நகர் போன்ற பகுதிகளில் ‘கரோனா’ பாதிப்பு அதிகமாக உள்ளது.

கடந்த 2 வாரத்திற்கு முன் வரை தினமும் 150 முதல் 250 பேருக்கு வரையே மதுரை மாவட்டத்தில் ‘கரோனா’ பரிசோதனை செய்யப்பட்டதால் இந்த நோய் பரவல் வெளியே தெரியவில்லை. தற்போது ஒரு நாளைக்கு 1,500 முதல் 2 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிகக்கப்படுவதால் சராசரியாக 250 முதல் 300 பேர் வரை தினமும் இந்த நோயால் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்படுகின்றனர்.

கடந்த 3 வாரம் முன் வரை, குறைவான பரிசோதனை செய்ததால் ஒருவருக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்து அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் மறுநாளே அதன் முடிவு அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

மருத்துவமனையிலும் அவர்கள் உடனடியாக அனுமதிக்கப்பட்டு நேரத்திற்கு நேரம் ஆரோக்கியமான சத்துள்ளவு உணவுகள், நோய் எதிர்ப்பு சக்தி நீர் ஆகாரங்கள் வழங்கி கவனிப்பும், சிகிச்சையும் சிறப்பாக இருந்தது.

இந்நிலையில் தற்போது பரிசோதனை எண்ணிக்கை அதிகரிகரிக்கப்பட்டதால் இந்த தொற்றுநோய் அறிகுறி இருப்பவர்களுக்கும், நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மதுரை அரசு மருத்துவமனை மட்டுமில்லாது 13 மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘கரோனா’ பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுதவிர, 16 நடமாடும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல், மற்ற அறிகுறிகளை பார்த்து தேவைப்படுவோருக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்யப்படுகிறது. தொண்டை மற்றும் மூக்கில் எடுக்கப்பட்ட சளி மாதிரி, ரத்தமாதிரி எடுத்து, ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரியில் மைக்ரோபயாலஜி ஆய்வகத்திற்கு அனுப்புகிறார்கள்.

அங்கு மருத்துவர்கள், வைரஸ் தொற்று இருக்கிறதா? என்று பரிசோதனை செய்கிறார்கள். முன்பு பரிசோதனை முடிவு மறுநாளே தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வாரமாக பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதற்கு 3 முதல் 4 நாட்கள் வரை தாமதமாகிறது.

ஆய்வுக்காக அதிகமான மாதிரிகள் வந்து குவிவதால் மருத்துவக்கல்லூரி மைக்ரோபயாலஜி ஆய்வகத்தில் பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாகுவதாக கூறப்படுகிறது.

பரிசோதனை முடிவுகள் உடனடியாக தெரியாததால் சளி, ரத்த மாதிரிகளை கொடுத்துவிட்டு பாசிட்டிவா? நெகட்டிவா? என்று தெரியாமல் பொதுமக்கள் மிகுந்த மன குழப்பத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். வீட்டிற்குள் தனி அறைக்குள் அடைப்பட்ட அவர்கள் ஒவ்வொரு நாளையும் கடத்துவதற்கு மிகுந்த சிரமப்படுகிறார்கள்.

ஒரு நோயாளிக்கு தொற்று உறுதி செய்தால் அதன் முடிவு 4 வது நாள் நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. தொற்று இல்லாவிட்டாலும் அது தெரிவிக்கப்படுவதில்லை. தாமதமாக பரிசோதன முடிவு தெரிவித்தப்பிறகும், அவர்களை அவர்களுடைய உடல் ஆரோக்கியம், தொற்று அறிகுறிகளை பொறுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கும் தாமதமாகிறது.

மருத்துவமனையில் போதிய வசதி, சாப்பாடு கிடைக்காது என்பதால் வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டு டெலிமெடிசன் மூலம் சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகளுக்கும் மருந்து மாத்திரைகள் உடனடியாக கிடைப்பதில்லை.

தொற்று உறுதி செய்த மறுநாளே மருந்து மாத்திரைகள் வீட்டிற்கு மருந்து, மாத்திரைகள் வந்து சேருகிறது. ஆனால், தொற்று தெரிந்தாலே சம்பந்தப்பட்ட நோயாளிகள், அவர்கள் குடும்பத்தினர் வெளியே வராதப்படி வீட்டை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் பூட்டி செல்கிறார்கள்.

மதுரையில் ‘கரோனா’ பரிசோதனை செய்தவர்கள், இப்படி முடிவுகளை தெரிந்து கொள்வது முதல் தொற்று ஏற்பட்டால் சிகிச்சை பெறுவது வரை பெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடுவதால் விரைவாக முடிவுகளை அறிவிக்கவும், நோயாளிகளை உடனுக்குடன் மருத்துவமனையில் அனுமதிக்கவும், மருந்து மாத்திரைகள் கிடைக்கவும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x