Published : 03 Jul 2020 05:48 PM
Last Updated : 03 Jul 2020 05:48 PM

வீட்டில் தனிமைப்படுத்துதல், நோய்த்தொற்று தடுப்பு மேலாண்மை அமைப்பு குறித்து மொபைல் ஆப்: சென்னை மாநகராட்சி அறிமுகம்

செயலியைத் தொடங்கி வைக்கும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய்த்தொற்று தடுப்பு மேலாண்மை அமைப்பு குறித்த செல்போன் செயலியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூலை 3) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வார்டிலும் பல்வேறு வகையில் மக்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனைக் கண்காணிக்க 'வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய்த்தொற்று தடுப்பு மேலாண்மை அமைப்பு' உருவாக்கப்பட்டது.

இவ்வமைப்பு சீரிய முறையில் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு வார்டிலும் உள்ள அனைத்து தெருக்களுக்கும் 'கவனத் தன்னார்வலர்கள்' பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தெருக்களில் பல்வேறு வகையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை வீட்டிலிருந்து வெளியில் வராமல் இருப்பதைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக, பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்காக, 3,302 'கவனத் தன்னார்வலர்கள்' நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட 'கவனத் தன்னார்வலர்களது' பணியானது, பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையின் வரி வசூலிப்பவர்கள், உரிமம் ஆய்வாளர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை காவலர்கள் கொண்ட குழுவால் மேற்பார்வை செய்யப்பட்டு, அந்தந்தப் பகுதியைச் சார்ந்த வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் மண்டல உதவி வருவாய் அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கவனத் தன்னார்வலர்களது இந்தப் பணியினை மேலும் சிறப்பான வகையில் மேம்படுத்துவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 'Mr. Cooper Inc Company', வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய்த்தொற்று தடுப்பு மேலாண்மை அமைப்புக்கான புதிய செயலியை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் இந்தச் செயலியை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு இலவசமாக வழங்கி அதனைப் பராமரிக்கவும் செய்கிறது.

வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய்த்தொற்று தடுப்பு மேலாண்மை அமைப்புக்கான HQIMS APP என்கிற புதிய செயலியினை ஆணையர் பிரகாஷ் இன்று அறிமுகம் செய்து வைத்து, இந்தச் செயலியை உருவாக்கி வழங்கிய நிறுவனத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்தச் செயலியை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. இச்செயலியின் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களின் அடிப்படை விவரங்கள், தனிமைப்படுத்தப்பட்ட காலம், அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரத் தேவைகள் ஆகியவற்றை தன்னார்வலர்களின் துணையோடு தினந்தோறும் பெற இயலும்.

இச்செயலியில் இருந்து வரும் தகவல்கள் வருவாய்த்துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் துறையின் மூலம் பெறப்பட்டு இத்திட்டமானது திறம்பட நிர்வகிக்கப்படும்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x