Published : 03 Jul 2020 05:28 PM
Last Updated : 03 Jul 2020 05:28 PM
சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தனது விசாரணையை இன்றும் தொடர்ந்தார்.
வழக்கறிஞர், செவிலியர், வேன் டிரைவர் உள்ளிட்டோர் இன்று ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதேபோல் பெண் தலைமைக்காவலர் ரேவதி, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவலர் முத்துராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் தூத்துக்குடியிலேயே முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சிசிடிவி பதிவுகள் போன்றவற்றை இன்று சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்தனர்.
தலைமைக் காவலர் ரேவதி சாட்சி:
இந்நிலையில் போலீஸாருக்கு எதிராக சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியை சிபிசிஐடி போலீஸார் இன்று, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜூன் 19-ம் தேதி இரவு நடைபெற்ற சம்பவம் குறித்து தலைமை குற்றவியல் நடுவரிடம் சாட்சியம் அளித்தார். தொடர்ந்து அவரை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
காவலில் எடுக்க திட்டம்:
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன் ஆகியோரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஓரிரு நாளில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
நீதித்துறை நடுவர் விசாரணை:
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் அவர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் ரேவதி உள்ளிட்ட போலீஸார், ஜெயராஜ் குடும்பத்தினரிடம் அவர் விசாரணை நடத்தியுள்ளார்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு மருத்துவ சான்று அளித்த அரசு மருத்துவர் வினிலா, காவல் நிலைய எழுத்தர் பியூலா, சிசிடிவி கேமிரா ஆபரேட்டரான காவலர் தாமஸ் பிரான்சிஸ், ஜீப் டிரைவர் ஜெயசேகர், காவலர் அழகு மாரிசெல்வம், காவல் நிலைய தூய்மை பணியாளர் வேல்முருகன் ஆகியோரிடம் கடந்த 2 நாட்களாக நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இன்று திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து, சாத்தான்குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் கார்த்தீசன், அரசு மருத்துவமனை செவிலியர் கிருபை, வேன் டிரைவர் நாகராஜன் உள்ளிட்டோரிடம் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT